`27 பொருள்கள் இல்லை; கிழிந்த சேலைதான் இருக்கு!’ - அரசின் செயல்பாட்டால் கொதித்த டெல்டா | Gaja cyclone - Farmers complaints about relief materials

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (11/12/2018)

கடைசி தொடர்பு:17:00 (11/12/2018)

`27 பொருள்கள் இல்லை; கிழிந்த சேலைதான் இருக்கு!’ - அரசின் செயல்பாட்டால் கொதித்த டெல்டா

புயல் பாதிக்கப்பட்ட  பகுதியான பழஞ்சூரில் அரசு அறிவித்தபடி 27 இலவச பொருள்கள் தரப்பட்டன. கொடுக்கப்பட்ட பொருள்களில் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், கிழிந்த சேலையைக் கொடுத்துள்ளதாகவும் கூறி வேதனையடைந்த மக்கள், அரசு கொடுத்த சேலையை சாலையில் தூக்கி வீசிவிட்டுச் சென்றதால்  பரபரப்பு ஏற்பட்டது.

கிழிந்த சேலைகளுடன் கிராம மக்கள் மறியல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரிசி, வேட்டி,சேலை உள்ளிட்ட 27 வகையான பொருள்கள் ரேஷன் கடைகள் மூலம் தரப்படும் என அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் இன்று பட்டுக்கோட்டை அருகே உள்ள பழஞ்சூர் கிராமத்தில் 450 குடும்பத்துக்கு இலவச பொருள்கள் தரப்பட்டன. பொருள்களை வாங்கிச் சென்ற மக்கள் அடுத்த 5 நிமிடத்தில் கொந்தளிப்போடு திரும்பி வந்தனர். அரசு அறிவித்தபடி கொடுக்கப்பட்ட பொருளில் 27  வகையான பொருள்கள் இல்லை. எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும், பாதி பேருக்கு கொடுக்கப்பட்ட சேலைகள் கிழிந்திருந்தது எனக் கூறி அதைக் காட்டி மக்கள் முறையிட்டனர். அதற்கு ஊழியர்கள் சரியான பதிலை கூறவில்லை. இதனால் கோபம் அடைந்த மக்கள் அணைக்காடு - அதிராம்பட்டினம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழிந்த சோலைகள்

உடனே அந்தப் பகுதியின் வி.ஏ.ஓ, `யாரைக் கேட்டு சாலை மறியல் செய்தீர்கள். இதற்காக உங்களைக் கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன்' என மிரட்டினார். வி.ஏ.ஓ-வுக்கு துணையாக அ.தி.மு.க பிரமுகர் சிலரும் இருந்தனர். இதனால் கோபம் அடைந்த மக்கள், `எல்லாத்தையும் காத்துக்குப் பறிகொடுத்துவிட்டு தவித்துப்போய் நிற்கிறோம். எங்களுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை கூற வராத அதிகாரிகள் எங்கள் பகுதிகளைப் பார்வையிட வராத அமைச்சர்களின் செயலால் நொந்துபோய் கிடந்ததோம்.

அரசு கொடுத்த சேலை

இந்த நிலையில் அரசு 27 பொருள்கள் தரப்படும் என அரசு அறிவித்தது ஆறுதலாக இருந்தது. ஆனால், எங்களுக்கு கொடுக்கப்பட்டதில் 27 வகையான பொருள் இல்லை. மேலும், கிழிந்த சேலையைக் கொடுத்துள்ளனர். இதற்கு மேல் அரசு எங்களை அவமானப்படுத்த முடியாது'' எனப் பலரும் சேலைகளை சாலையில் தூக்கி வீசிவிட்டுச் சென்றனர்.

மறியலில் மக்கள்

இது குறித்து அந்த ஊரை சேர்ந்தவர்களிடம் பேசினோம். ``அரசு ஏழை மக்களுக்காக அறிவித்த பொருள்களை அ.தி.மு.க-வை சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கும் சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. கொடுக்கும் பொருள் தரம் இல்லாமலும் தரப்படுகிறது. புதிய சேலை எனக் கூறி பழைய கிழிந்த சேலையைத் தருகிறார்கள். இந்தச் சேலைகள் நிவாரணத்துக்குத் தருவதற்கு எனப் பாதிக்கப்படாத பகுதிகளில் வாங்கி வந்து கொடுப்பதுபோல் உள்ளது. ஏழைகள் உண்ண உணவு இல்லை என்றாலும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மானத்தை காக்க உடை அவசியமாக நினைப்பார்கள். அப்படிபட்டவர்களுக்கு கிழிந்த சேலையைக் கொடுத்து அவமானப்படுத்தி மனதைக் காயப்படுத்தியுள்ளது அரசு. இதற்குக் கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்'' எனக் கொந்தளிப்புடன் தெரிவித்தனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க