` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்!' - வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்' சீனிவாசன் | Power star shared his bitter experience in hotel room

வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (11/12/2018)

கடைசி தொடர்பு:15:51 (11/12/2018)

` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்!' - வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்' சீனிவாசன்

 பவர் ஸ்டார் சீனிவாசனைக் கடத்திய கும்பல்

சென்னை கோயம்பேடு ஹோட்டல் அறையில், கத்திமுனையில் உள்ளாடையோடு உட்கார வைத்திருந்ததாக, நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் வேதனையுடன் தெரிவித்தார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஆலம் மற்றும் அவரின் கூட்டாளிகள், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை சென்னையிலிருந்து ஊட்டிக்குக் கடத்தினர். ஊட்டியில் பவர் ஸ்டாரின் மனைவி ஜூலியின் பெயரில் உள்ள வீட்டை எழுதித்தரும்படி ஆலம் தரப்பினர் பவர் ஸ்டார் சீனிவாசனையும், மனைவி ஜூலியையும் ஊட்டியில் 6 நாள்கள் சிறைவைத்தனர். அவர்களிடமிருந்து தப்பிய பவர்ஸ்டார், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் கடத்தல் கும்பலிடமிருந்து ஜூலியை மீட்டு, ஆலம் உள்பட 7 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

கடத்தல் சம்பவம் குறித்து பவர்ஸ்டார் சீனிவாசனிடம் பேசினோம். 

``கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், பெங்களூருவைச் சேர்ந்த ஆலம் என்பவரிடம் 1.25 கோடி ரூபாய் வாங்கினேன். அந்தப் பணத்தில் 35 லட்ச ரூபாய் திரும்பக் கொடுத்துவிட்டேன். மீதமுள்ள 90 லட்ச ரூபாயைத் திரும்பக் கொடுக்கப்பதாகக் கூறியிருந்தேன். அதுதொடர்பான வழக்கு, பெங்களூரு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச் சமயத்தில்தான், பிரித்தி என்ற சினிமா பி.ஆர்.ஓ என்னிடம் போனில் பேசினார். அதை நம்பி, கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டலுக்கு 5-ம் தேதி காலை 11 மணியளவில் சென்றேன். 210 நம்பர் அறைக்கு நான் சென்றபோது, அங்கு செல்வின் தலைமையில் சிலர் இருந்தனர். அவர்கள்தான் என்னை மிரட்டினர். ஆலம் என்பவரிடம் நான் வாங்கிய பணத்தை உடனடியாகக் கொடுக்கும்படி அவர்கள் எனக்கு டார்ச்சர் கொடுத்தனர். 

பவர் ஸ்டார் சீனிவாசன்

என்னுடைய பேன்ட், சட்டை மற்றும் இரண்டு செல்போன்களைப் பறித்தனர். அப்போது, என்மீது இரக்கப்பட்ட ஒருவர், என்னுடைய உடைகளை எனக்குக் கொடுத்தார். அன்றைய தினம் எனக்கு சாப்பாடு வாங்கித்தரவில்லை. 5-ம் தேதி மாலை 4 மணியளவில், ஒரு டீ மட்டும் வாங்கிக்கொடுத்தனர். சாப்பாடு கேட்டும் அவர்கள் தரவில்லை.  6-ம் தேதி, ஊட்டிக்கு காரில் அழைத்துச் சென்று ஆலத்திடம் ஒப்படைத்தனர். அவர், ஊட்டி ரயில் நிலையம் அருகில் உள்ள குடோனில் என்னை அடைத்துவைத்தனர். அப்போதும்கூட எனக்கு சரிவர சாப்பாடு வாங்கித்தரவில்லை. என்னை அடைத்துவைத்திருந்தபோது, 5 பேர் காவலுக்கு இருந்தனர். அவர்களின் கைகளில் கத்திகள் இருந்தன. தப்பி ஓட முயன்றால் சுட்டுவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டினர். 

 6-ம் தேதி காலையில் இரண்டு இட்லியும், இரவு இரண்டு சப்பாத்தியும் மட்டுமே கொடுத்தனர். சரியாக சாப்பாடு கொடுக்காமல் என்னைச் சித்ரவதை செய்தனர். அடிக்கவும் செய்தார்கள். என்னைக் கடத்திய தகவலை என் மனைவி ஜூயிடம் தெரிவித்தனர். அவரையும் ஊட்டிக்கு வரவழைத்தனர். ஊட்டியில் அவருக்கும் கடும் டார்ச்சர் கொடுத்தனர். எங்களிடம் சில கையெழுத்துகளை வாங்கினர். 8-ம் தேதி நான், என்னைக் கடத்தியவர்களிடம், குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்னைக் கடத்திய தகவல் மீடியாக்களுக்கு தெரிந்துவிட்டது. எனவே, என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன். இதனால் அவர்கள், என்னை அங்கிருந்து விடுவித்தனர். அப்போதுகூட போலீஸுக்குப் போனால், உன் குடும்பமே இருக்காது என மிரட்டி அனுப்பிவைத்தனர். ஊட்டியிலிருந்து சென்னைக்கு வந்ததும், நடந்த சம்பவத்தை போலீஸாரிடம் கூறினேன். 10-ம் தேதி, போலீஸார் மூலம் ஜூலியை மீட்டுவிட்டனர்" என்றார். 

பி.ஆர்.ஓ. பிரித்தி உங்களிடம் என்ன பேசினார்? 

 ``பட வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். அவரை நம்பி ஹோட்டலுக்குச் சென்றேன். ஆனால், அங்கு எனக்கு படம் காட்டிவிட்டார்கள். பிரித்தி  பேசிய ஆடியோ என்னிடம் இருக்கிறது. என்னைக் கடத்த கூலிப்படைக்கு 10 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார்கள்." 

உங்களுக்கு எப்படியெல்லாம் டார்ச்சர் கொடுத்தார்கள்?

 ``ஆலம் என்னிடம் கொடுத்த பணத்தைக் கேட்டு டார்ச்சர் செய்தார்கள். இதனால், மனைவியின் பெயரில் ஊட்டியில் உள்ள வீட்டை எழுதிக்கொடுக்க சம்மதித்தேன். கோயம்பேடு ஹோட்டல் அறையில் 5 நிமிடம் என்னை ஜட்டியோடு உட்கார வைத்தார்கள். அதன்பிறகு என்னுடைய உடைகளைத் திரும்பக் கொடுத்துவிட்டார்கள். என்னையும் என் மனைவியையும் தனித்தனியாக அடைத்துவைத்திருந்தார்கள். உதகையில் உள்ள குடோனில், எனக்கு சரிவர சாப்பாடு தராமல் தகாத வார்த்தைகளால் பேசினார்கள். என் மனைவி ஜூலியைத் தனியறையில் அடைத்துவைத்துள்ளனர். குழந்தைகளிடம்கூட பேச அனுமதி மறுத்துள்ளனர். அவர், ஒரு இதய நோயாளி. மருந்து, மாத்திரைகளைக்கூட கொடுக்கவில்லை. என்னால் அவருக்கு இந்த நிலைமை. அவருக்கு நேர்ந்த கொடுமைகளை எதுவும் என்னிடம் சொல்லவில்லை. அதுகுறித்து கேட்டால், எதுவும் பேசாமல் அழுகிறார்"

 பவர் ஸ்டார், அவரின் மனைவி ஜூலி

உங்கள் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? 

``அதுபற்றி வெளியில் சொல்லவிரும்பவில்லை. சட்டத்தை மதித்து அனைத்து வழக்குகளிலும் ஆஜராகிவருகிறேன். டெல்லியில் நடக்கும் வழக்கில்கூட, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள முகப்பேரில் உள்ள வீட்டின் டாக்குமென்ட்டை கொடுத்துள்ளேன்."

 ஆலம் என்பவரிடம் எதற்காகப் பணம் வாங்கினீர்கள்? 

``பிசினஸில் கமிஷனாகப் பணம் வாங்கினேன்.  அதனால் வட்டி கிடையாது. ஒரு டீலிங்கில் கமிஷனுக்காக அவர் அந்தத் தொகையை எனக்குக் கொடுத்தார். ஆனால், அந்த டீலிங் முடியவில்லை.  அதனால், கொஞ்சம் பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டேன். மீதி பணத்தை கொடுக்க சம்மதம் தெரிவித்துவிட்டேன். ஆலம், பெங்களூருவில் ஃபைனான்ஸ் செய்துவருகிறார்"

சினிமாவில் காமெடியனான உங்களின் நிஜ வாழ்க்கை ஏன் டிராஜெடியாக இருக்கிறது? 

``நான், மருத்துவமனை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், டிராவல்ஸ் எனப் பல தொழில்களில் ஈடுபட்டேன். அதோடு சினிமாவிலும் நடித்தேன். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகத்தான் இந்த நிலைமைக்கு வந்துவிட்டேன். என்னிடம் வேலைபார்த்தவர்களுக்கும் சம்பளம், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், வாடகைக்காகப் பலரிடம் கடன் வாங்கி நிலைமையை சமாளித்தேன். ஜனவரியில், குறிப்பிட்ட தொகை வரும் என எதிர்பார்க்கிறேன். அதன்பிறகு எல்லாப் பிரச்னைகளுக்கும் முடிவு ஏற்பட்டுவிடும். மொத்தத்தில் நம்பி ஏமாந்துவிட்டேன்."

தற்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்? 

 `` 'வா பகண்டடைய்யா, முருங்கைக்காய்', 'அவதார வேட்டை', `தெறிக்கவிடலாமா'  ஆகிய படங்களில் நடித்துள்ளேன். இது தவிர, இரண்டு புதிய படங்களில் நடிக்க உள்ளேன்'' என்றவர், சார் இதைக் கண்டிப்பாக எழுதுங்க. ``நான் சினிமாவில் நடித்துவருவதால் என்னிடம் பணம் அதிகமாக இருக்கிறது என்று கருதித்தான் என்னை கடத்தினார்கள். என்னையும் என் மனைவியையும் கடத்திவிட்டதாக செய்திகள் வெளியான பிறகும்கூட, நடிகரான எனக்கு நடிகர் சங்கத்திலிருந்து ஒரு ஆறுதலான வார்த்தைகூட யாரும் சொல்லவில்லை. அதுதான் மனசு ரொம்ப வேதனையாக இருக்கிறது. பணம் கொடுக்கல் பிரச்னையில் நடிகர் என்றுகூட பார்க்காமல் கூலிப்படையை வைத்து கடத்தும் சம்பவம் நடந்துள்ளது. போலீஸார் இல்லை என்றால், நானும் என் மனைவி மற்றும் குடும்பத்தினரும் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டோம். இதனால், போலீஸாருக்கு தேங்க்ஸ் சொல்லிக்கொள்கிறேன். இதுபோன்ற கடத்தல் சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கக் கூடாது. என்னிடம் கடத்தல் கும்பல் கூறிய தகவல் அதிர்ச்சிகரமானது. பயந்த குடும்பத்தினர் கடத்தல் கும்பலிடம் சிக்கினால், சாவதைத் தவிர வேறு வழியில்லை. சட்டத்தை கையில் எடுக்கும் கூலிப்படையினர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கே இந்த நிலைமை என்றால், நாளை குழந்தைகளுக்கு என்ன நிலைமை என்று தெரியவில்லை. மாஃபியா கும்பல் போல அவர்கள் செயல்பட்டனர். வீட்டுக்கு வந்திருந்தால், ஊட்டி வீட்டை எழுதிக்கொடுத்திருப்பேன்" என்றார்.