வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (11/12/2018)

கடைசி தொடர்பு:17:20 (11/12/2018)

"வளைகாப்பு செய்து ராதிகா மேம் சர்ப்ரைஸ் கொடுத்தாங்க!" - நீலிமா ராணி ஷேரிங்க்ஸ்

நீலிமா ராணி

டிகை நீலிமா ராணி, நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்துவருகிறார். தற்போது நிறைவடைந்திருக்கும் 'வாணி ராணி' சீரியலில் நடித்த அனுபவம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியாகப் பேசுகிறார். 

"ஆக்டிவா சீரியல்கள்ல நடிச்சுகிட்டு இருந்த நிலையில, ரெண்டு வருஷம் பிரேக் எடுத்திருந்தேன். அப்போதுதான், 'வாணி ராணி' சீரியல்ல ராதிகா மேடத்தின் மருமகளாகவும், 'தாமரை' சீரியல்ல ஹீரோயினாகவும் வாய்ப்பு வந்துச்சு. மகிழ்ச்சியா நடிக்க ஆரம்பிச்சேன். பல வருஷமா ஒரே குடும்பமா 'வாணி ராணி'யில நடிச்சோம். அதுவும்  என் கரியர்ல முதல் முறையா நெகட்டிவ் ரோல்ல நடிச்சேன். ராதிகா மேடம் தொடர்ந்து ஓய்வில்லாமல் ஓடிக்கிட்டே இருப்பாங்க. அந்த உத்வேகம் அவங்களுக்கு எப்படிக் கிடைக்குதுனு தெரியலை. என்ன பிரச்னை வந்தாலும், ராதிகா மேடம் ஷூட்டிங் செட்டுக்குள்ள வந்ததும் அப்படியே மகிழ்ச்சியான சூழலுக்குள் வந்திடுவாங்க. ஒருமுறை அவங்க ஆபீஸ்ல ஐடி ரெய்டு நடந்துட்டு இருந்துச்சு. ஆனா, அப்போகூட அவங்க எந்தப் பதற்றமும் இல்லாம எங்களோடு ரெண்டு ரோல்லயும் நடிச்சுக்கிட்டு இருந்தாங்க. இப்போ, பிரமாண்டமான 'சந்திரகுமாரி' சீரியல்ல நடிக்கிறாங்க. அவங்களுக்கு என் வாழ்த்துகள்! 'வாணி ராணி'யில வேலைபார்த்த ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத மெமரீஸ்தான். சீரியல்ல நடிச்சுக்கிட்டு இருக்கும்போது நிஜமாகவே நான் கர்ப்பமா இருந்தேன். எனக்காக, சீரியல்லயும் நான் கர்ப்பமா இருக்கிற மாதிரி கேரக்டரை ஃப்ரேம் பண்ணினாங்க. நிஜத்தில் என் வீட்டில் வளைகாப்பு நடந்த நிலையில், எனக்கு சீரியல்லயும் வளைகாப்பு செய்து, ராதிகா மேம் சர்ப்ரைஸ் கொடுத்தாங்க. டெலிவரிக்கு முந்தின நாள் வரை அந்த சீரியல்ல நடிச்சேன்" என்கிறார். 

நீலிமா ராணி

மகள் அதிதி இசையைப் பற்றி பேசுகையில், "குழந்தை பிறந்து அடுத்த ஒரே மாதத்துல மறுபடியும் ஷூட்டிங் கிளம்பிட்டேன். பிறகு, பல மாதங்கள் குழந்தையை  ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிப்போனேன். அங்கேயே தாய்ப்பால் கொடுத்து, குழந்தையைப் பார்த்துக்கிட்டேன். குழந்தை தவழ ஆரம்பிச்சதும், சுகாதார காரணங்களுக்காக, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டுப்போறதை நிறுத்திட்டேன். ரொம்ப ஹேப்பி சைல்டு. என்னை எந்தத் தொந்தரவும் செய்யாம அமைதியா இருப்பாள். நான் வீட்டில் இருக்கும்போது என்னை விட்டுப் பிரியமாட்டாள். ஒன்றரை வயசாகும் அதிதிக்கு, மியூசிக் ரொம்பப் பிடிக்கும். ரைம்ஸ் பாடுவாள். செல்போன்ல இருக்கிற அவ போட்டோவை காட்டினால், 'பாப்பா பாப்பா'னு சந்தோஷப்படுவாள். ஜன்னல் வழியா ரோட்டுல போறவங்களை, 'ஏய்.. ஏய்'னு மிரட்டுறாள். போன வாரம், 'வாணி ராணி' கடைசி நாள் ஷூட்டிங்கின்போது அதிதியைக் கூட்டிட்டுப்போனேன். 'பொண்ணு வளர்ந்துட்டாளே'னு எல்லோரும் சந்தோஷப்பட்டாங்க" என்று புன்னகைக்கிறார், நீலிமா ராணி.