வெளியிடப்பட்ட நேரம்: 16:44 (11/12/2018)

கடைசி தொடர்பு:16:44 (11/12/2018)

`வந்தே மாதரம்' முழங்கி பாரதியார் பல்லக்கு தூக்கி பேரணியாக வந்த மாணவர்கள்!

மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வேடம் அணிந்த இளம் பாரதிகள், பாரதியாரின் உருவப்படத்தைப் பல்லக்கில் தூக்கிவந்து, எட்டயபுரம் பிறந்த இல்லத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர்.

பாரதிகள்  உருவப்படத்தை பல்லக்கில் தூக்கி வரும் மாணவர்கள்

கவிஞர், பத்திரிகையாளர், சமூகப் புரட்சியாளர், சுதந்திரப் போராட்ட தியாகி எனப் பன்முகத்தன்மையுடன் வாழ்ந்து மறைந்ததால்தான் பாரதியாரை மகாகவி என்கிறார்கள். இந்தியப் பத்திரிகை உலகில் கார்ட்டூனை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் பாரதி. இன்றைய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் பாரதியார். அதனால்தான், பாரதியார் பிறந்த தினத்தைப் பத்திரிகையாளர் தினமாக அறிவிக்க வேண்டும் எனப் பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாரதி வேடத்துடன் மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ளது, மகாகவி பாரதியாரின் பிறந்த இல்லம். பாரதியின் 137-வது பிறந்தநாள் விழா, கோவில்பட்டி ரோட்டரி சங்கம், பாரதியார் நினைவு அறக்கட்டளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட நூலகத்துறை சார்பில் இன்று எட்டயபுரத்தில் நடைபெற்றது.  தமிழ் பாப்பிஸ்து பள்ளி, மாரியப்ப நாடார் பள்ளி மற்றும் கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த  137 மாணவ மாணவிகள் பாரதியாரின் வேடம் அணிந்து, சுப்பிரமணிய பாரதிக்கு 'பாரதி' பட்டம் வழங்கப்பட்ட எட்டப்ப மன்னனின் அரண்மனையில் இருந்து பேரணியாக அவரின் பிறந்த இல்லம் நோக்கி வந்தனர்.

பாரதியின் பாடலுக்கு நடனமாடும் மாணவிகள்

 பல்லக்கைத் தூக்கிக்கொண்டு, வேடமிட்ட பாரதிகள் 'வந்தே மாதரம்' கோஷம் எழுப்பியபடியே முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர். மாணவிகள் கோலாட்டம் ஆடியும், பாரதியின் பாடல்களைப் பாடியும் சென்றனர். 

பாரதி வேடமிட்டுள்ள மாணவர்கள்

பாரதியின் வீட்டில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதைசெய்தனர். பின்னர், "வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வேன். குறைந்த விலையில் நல்ல புத்தகங்களை வாங்கிப் படிப்பேன். வீடுதோறும் சிறிய நூலகத்தை அமைப்பேன்." என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பாரதி வேடமணிந்து வந்த இளம் பாரதிகளைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.  மாணவ மாணவிகளுக்கு பாரதியார் கவிதை நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க