வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (11/12/2018)

கடைசி தொடர்பு:17:14 (11/12/2018)

‘மேக்கே தாட்டூ பிரச்னையை எழுப்புவோம்; நாடாளுமன்றத்தை முடக்குவோம்!’ - அ.தி.மு.க எம்.பி ஹரி

‘நாளைய கூட்டத்தொடரில் மேக்கே தாட்டூ பிரச்னையை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்குவோம்’ என்று அரக்கோணம் அ.தி.மு.க எம்.பி கோ.ஹரி தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.பி ஹரி

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அ.தி.மு.க எம்.பி-க்களும் ஒட்டுமொத்தமாக, மேக்கே தாட்டூ அணை உட்படத் தமிழகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளனர். இதுபற்றி டெல்லியில் இருக்கும் அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க எம்.பி கோ.ஹரியிடம் பேசினோம்.

‘‘தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேக்கே தாட்டூவில் அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேக்கே தாட்டூவில் ஆய்வு செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். ஆய்வு செய்யக்கூட தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இப்பிரச்னையில் தீர்வு காணவும், தமிழகத்துக்கு உரிய நியாயம் கிடைக்கவும் நான் உட்படக் கடலூர் திருச்சி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளின் எம்.பி-க்கள் சேர்ந்து ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்திருக்கிறோம். நாளை அவைத் தொடங்கியுடன் ஒட்டுமொத்த அ.தி.மு.க எம்.பி-க்களும் மேக்கே தாட்டூ பிரச்னையை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்குவோம்’’ என்றார்.