`சுருக்குமடி வலை பயன்படுத்த வேண்டாம்’ - மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்! | district collector insists fishermen not to use banned fishnet to fetch fishes

வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (11/12/2018)

கடைசி தொடர்பு:17:25 (11/12/2018)

`சுருக்குமடி வலை பயன்படுத்த வேண்டாம்’ - மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்துவதை மீனவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். 

மீனவர் குறை தீர் கூட்டம்

நெல்லை மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ராதாபுரத்தில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தலைமையில் நடைபெற்றது. ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரான ஐ.எஸ்.இன்பதுரை முன்னிலையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தங்குளி, கூட்டப்பனை, கூடுதாழை, உவரி ஆகிய ஏழு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றார்கள்.  

இந்தக் கூட்டத்தில், தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் தமிழ்நாடு கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் ஆகியவை குறித்து மீனவர்களுக்கு விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டதுடன், அந்தத் திட்டங்களைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள். மீன் பிடித் தடைக்கால நிவாரணத் திட்டம், மீன் பிடி குறைவு கால நிவாரணத் திட்டம் ஆகியவை பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.

மீனவர்கள் பயன்படுத்துவதற்கான கம்பியில்லா தொடர்பு சாதனம் மற்றும் உயிர் காக்கும் சாதனங்கள் வழங்குதல் பற்றி விவாதிக்கப்பட்டது. வள்ளம் பதிவு செய்யும் வழிமுறைகள், மீன் பிடி உரிமம் வழங்குதல், மீனவர் அடையாள அட்டை மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம், இழு வலை படகுகளை சூரை மீன் பிடிப்புப் படகாக மாற்ற 50 சதவிகிதம் மானியம் வழங்கும் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

சுருக்குமடி வலை பயன்படுத்த தடை

பின்னர், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் பேசுகையில், ``மீனவர்கள் தெரிவித்த குறைகள் அனைத்தும் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். கடல் அரிப்பு ஏற்படும் இடங்களில் கரைப் பகுதியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் அரசின் திட்டங்களை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் கடல் ஆமைகள் இன விருத்திக்காகக் கடலிலிருந்து வெளியேறி நிலத்துக்கு வருகின்றன. அந்தச் சமயத்தில் அவற்றுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்யக் கூடாது. 

வனவிலங்குச் சட்டப்படி, கடல் ஆமைகளைப் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம். அதனால் மீனவர்கள், ஆமைகளுக்குத் தொந்தரவு செய்யக் கூடாது. தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது’’ எனக் கேட்டுக் கொண்டார்.