`லீவு கேட்டது குத்தமா?’ - ஆர்.டி.ஓ-வுக்கு எதிராகக் கொந்தளித்த வி.ஏ.ஓ சங்கம் | VAO's association members staged protest in ariyalur

வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (11/12/2018)

கடைசி தொடர்பு:17:41 (11/12/2018)

`லீவு கேட்டது குத்தமா?’ - ஆர்.டி.ஓ-வுக்கு எதிராகக் கொந்தளித்த வி.ஏ.ஓ சங்கம்

மூன்று வி.ஏ.ஓ-க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய வேலை புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

                                      

அரியலூர் மாவட்டம் கருப்பூர் சேனாபதி கிராம நிர்வாக அலுவலராக இருக்கும் ராமர் என்பவர் விடுப்பு எடுப்பது சம்பந்தமாக வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் அரியலூர் துணை தாசில்தார் குருமூர்த்தி ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது கிராம நிர்வாக அலுவலருக்கு ஆதரவாகப் பிரபாகரன் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பின்னர் கைகலப்பாக மாறியது. இதுகுறித்து அரியலூர் கோட்டாட்சியர் சத்திய நாராயணன் தகராறில் ஈடுபட்ட மூன்று கிராம நிர்வாக அலுவலர்களைத் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். 

                                                   போலீஸார்

இதைக் கண்டித்தும் உரிய விசாரணை செய்யாமல் ஒருதலைபட்சமாகக் கோட்டாட்சியர் நடந்துகொண்டதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கம் மாநில நிர்வாகிகள் மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தலைமையில் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

                                 

பின்னர் மாநிலத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``உரிய விசாரணை இன்றி ஒருதலைப்பட்சமாக 3 வி.ஏ.ஓ-க்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நாளை முதல் மூன்று நாள்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்றச் சங்கத்தின் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள். இதையடுத்து மண்டல அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும். இதிலும், முடிவு ஏற்படாவிட்டால் மண்டல நிர்வாகிகள் உடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். மேலும், தற்காலிக பணிநீக்க உத்தரவு ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய வகையில் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் ஈடுபடுவார்கள்’’ என்று தெரிவித்தார்.