அதிகாரிகளை ஆபாசமாகப் பேசிய அ.ம.மு.க மாவட்டச் செயலாளர்? - கைது செய்த போலீஸ் | amma makkal munnetra kazhagam secretary arrested in sivaganga

வெளியிடப்பட்ட நேரம்: 22:36 (11/12/2018)

கடைசி தொடர்பு:07:30 (12/12/2018)

அதிகாரிகளை ஆபாசமாகப் பேசிய அ.ம.மு.க மாவட்டச் செயலாளர்? - கைது செய்த போலீஸ்

சிவகங்கை அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் உமாதேவன் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை ஆபாசமாகப் பேசியதால் கட்சித் தொண்டர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டு ஆட்சியர் அலுவலகம் கலவரம் போல் காட்சியளித்தது. சிவகங்கை போலீஸார் உமாதேவன் மீது வழக்கு பதிவு செய்து அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

உமாதேவன்

சிவகங்கை மாவட்ட அ.ம.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமானவர் கே.கே.உமாதேவன். இவர் சமீபத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலின்போது காரைக்குடி கூட்டுறவுச் சங்க அதிகாரியைத் தாக்கிய வழக்கில் கைதாகாமல் முன் ஜாமீன் பெற்றிருக்கிறார். அடுத்ததாக சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை நபார்டு திட்டத்தின் கீழ் நவம்பர் மாதக் கடைசியில் டெண்டர் விட்டது. அந்த டெண்டரில் முறைகேடு இருப்பதாக மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வந்திருக்கிறார் உமாதேவன். ஆட்சியர் இல்லாததால் இத்துறையின் திட்ட இயக்குநர் வடிவேலுவை சந்திக்க அவரது அறைக்குள் சென்றிருக்கிறார் உமாதேவன். அப்போது செயற்பொறியாளர் முருகன், வடிவேலு ஆகியோரிடம் நபார்டு டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் பேசிக்கொண்டு இருக்கும்போது உமாதேவன் அதிகாரிகளை அசிங்கமாகப் பேசியிருக்கிறார். உடனே திட்ட இயக்குநர் வடிவேலு உமாதேவனை அவரது அறைக்குள் வைத்துப் பூட்டியதோடு போலீஸுக்கு போன் செய்து விட்டார். 

உமாதேவன் தன்னுடைய கட்சிக்காரர்களுக்குப் போன் செய்ததும்  அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து விட்டார்கள். மேலும் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கும், அ.ம.மு.க கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உமாதேவனை நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று 147, 294(b), 452, 353, 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் புகார் கொடுக்கப் பயந்துகொண்டு ராதாகிருஷ்ணன் என்கிற ஊழியரைப் புகார் கொடுக்க வைத்திருக்கிறார்கள். உமாதேவன் தரப்பில் கவுண்டர் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. உமாதேவன் தனியாக ஏன் திட்ட இயக்குநரை சந்திக்கச் சென்றார் என்கிற கேள்வி கட்சியினர் மத்தியில் எழுந்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க