நள்ளிரவில் ஏற்பட்ட வாக்குவாதம் - மனைவியைக் கொடூரமாக கொலை செய்த கணவன்! | Tirupur man arrested for murder his wife

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (12/12/2018)

கடைசி தொடர்பு:07:50 (12/12/2018)

நள்ளிரவில் ஏற்பட்ட வாக்குவாதம் - மனைவியைக் கொடூரமாக கொலை செய்த கணவன்!

திருப்பூர் அருகே குடும்பத் தகராற்றில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவனைக் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

மூர்த்தி

திருப்பூர் செல்லம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. 32 வயதான இவர் திருப்பூரில் உள்ள ஒரு பிரிண்டிங் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி கோமதியும் அதே பிரிண்டிங் நிறுவனத்தில்தான் பணியாற்றி வந்துள்ளார். இத்தம்பதி இருவரும் கோமதியின் தாயாரான ஜோதியின் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மூர்த்தி மற்றும் கோமதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் வாக்குவாதம் முற்றி இருவருக்குமிடையே தகராறு ஏற்படவே, ஆத்திரம் அடைந்த கணவன் மூர்த்தி அங்கு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி கோமதியின் கழுத்தில் வேகமாகக் குத்தியிருக்கிறார். 

கொலை

இதனால் அதிகளவு ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே மனைவி கோமதி உயிரிழந்து போனார். தம்பதியின் சத்தம்கேட்டு அவர்களைத் தடுக்க வந்த மாமியார் ஜோதியையும் தன் கையில் வைத்திருந்த கத்தியால் தாக்கியிருக்கிறார் மூர்த்தி. பின்னர் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட கோமதியின் பிரேதத்தைக் கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார்கள்.

அதைத்தொடர்ந்து காயம்பட்ட மாமியார் ஜோதியையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து கணவர் மூர்த்தியைக் கைது செய்த காவல்துறையினர் கொலை சம்பவம் தொடர்பாக தற்போது தொடர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.