வெளியிடப்பட்ட நேரம்: 05:31 (12/12/2018)

கடைசி தொடர்பு:08:03 (12/12/2018)

`மக்கள் தலைவர்!’ - பட்டம் சூட்டி ரஜினியை முழுநேர அரசியலுக்கு அழைப்பு விடுத்த ரசிகர்கள்

ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி, வேலூரில் யாகம் நடத்திய மன்ற நிர்வாகிகள், ரஜினிக்கு `மக்கள் தலைவர்’ பட்டம் சூட்டி முழுநேர அரசியலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர்-12) தன்னுடைய 69-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு ‘மகா ருத்ர யாகம்’ நடைபெற்றது. இதில் ரஜினியின் அண்ணன் சத்ய நாராயண ராவ் கலந்துகொண்டு யாகத்தைத் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி உட்பட மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்காக வேலூர் நகரம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் `மக்கள் தலைவர் ரஜினிகாந்த்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ‘தன்னுடைய பிறந்தநாளில் கட்சி அறிவிப்பு குறித்த தகவலை வெளியிடுவதாக’ ரஜினி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் `மக்கள் தலைவர்’ என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் சூட்டியுள்ள பட்டம், அவர் முழுநேர அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.