சிதம்பரம் அரசு மருத்துவமனையில் எலித் தொல்லை! | Rat Nuisance in Chidambaram govt hospital

வெளியிடப்பட்ட நேரம்: 02:08 (12/12/2018)

கடைசி தொடர்பு:08:12 (12/12/2018)

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் எலித் தொல்லை!

சிதம்பரத்தை அடுத்த தண்டேஸ்வரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (22). பட்டதாரி இளைஞரான இவர் நேற்று தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் குறித்து அவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வைத்தீஸ்வரனின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவமனையின் சவக் கிடங்கில் வைத்தீஸ்வரனின் சடலம் வைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று பிரேதப் பரிசோதனைக்காக வைத்தீஸ்வரனின் சடலம் சவக்கிடங்கில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. 

அப்போது சடலத்தின் மூக்கை எலி கடித்து குதறி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இதுகுறித்து சிதம்பரம் அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கூறியுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் இதை அலட்சியப்படுத்திப் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், இதுபற்றி கூறிய வைத்தீஸ்வரனின் நண்பர்கள், நேற்று உயிரிழந்த நண்பரின் சடலத்தை இன்று பார்த்தபோது  மூக்கை எலி கடித்துக் குதறி இருந்ததாகவும், இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாகப் பதில் கூறுகின்றனர். இறந்து விட்டார் என்பதால் அந்த உடலைப் பாதுகாப்பு இல்லாமலா வைப்பார்கள் எனக் கூறி, அரசு இது குறித்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கூறினார்கள்.