வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (12/12/2018)

கடைசி தொடர்பு:11:04 (12/12/2018)

ப்ளஸ் ஒன் மாணவிக்குத் தாலிகட்ட முயன்ற தாய்மாமன்!’ - அதிரடி காட்டிய தாசில்தார்

நாட்றம்பள்ளியில் இன்று காலை ப்ளஸ் 1 மாணவிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தாசில்தார் தடுத்து நிறுத்தினார்.

திருமணம்

வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி கூத்தாண்ட குப்பத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரின் மகள் ப்ளஸ் 1 படிக்கிறார். திருமண வயதை எட்டாத இந்த மாணவியை, அவரின் தாய்மாமன் ஆனந்தனுக்கு (33) மணமுடிக்கப் பெற்றோர் முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் முடிந்து நாட்றம்பள்ளியில் உள்ள சாமூண்டீஸ்வரி கோயிலில் இன்று காலை முகூர்த்த நேரத்தில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகளைத் தடபுடலாக செய்தனர்.

இதுபற்றி, தாசில்தார் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர், கோயிலுக்குச் சென்றார். மாணவியின் கழுத்தில் தாய்மாமன் தாலி கட்ட முயன்றுள்ளார். விரைந்து வந்த தாசில்தார் திருமணத்தை நிறுத்தினார். ‘பள்ளி மாணவிக்குத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்தார். ‘18 வயது நிரம்பிய பிறகு திருமணத்தை நடத்திக் கொள்கிறோம்’ என்று இருவீட்டாரும் கூறினர்.

இதுசம்பந்தமாக திம்மாம்பேட்டை போலீஸார், மணமக்கள் வீட்டாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.