வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (12/12/2018)

கடைசி தொடர்பு:12:40 (12/12/2018)

ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்! - ஆளுநர், அமைச்சர்கள் பங்கேற்பு

18 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

2,500 வருடப் பழைமை வாய்ந்த  பஞ்சபூதங்களில்  நீர் தலமாகவும், சைவத் திருத்தலங்களில் முக்கிய தலமாகவும் விளங்கும் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் 18 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உபயதாரர்களின் ஐந்து கோடி ரூபாய் மூலம் கோயில் பணி செய்யப்பட்டது.  அதைத் தொடர்ந்து இரண்டு கட்டங்களாக திருச்சி திருவானைக்கோவில்  ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம் நடத்திட இந்து சமய அறநிலையத்துறையினர்  முடிவு செய்தனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடந்த கும்பாபிஷேகம்

குடமுழுக்கு விழாவுக்காகக் கிழக்கு வாசல் சுந்தரபாண்டியன் கோபுரம் கோயில் மற்றும் நவராத்திரி மண்டபம் அருகில் யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டுத் தொடர்ந்து 7-ம் தேதி நவராத்திரி மண்டபத்தில் பரிவாரமூர்த்திகளுக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கின. அதையடுத்து இக்கோயிலின் பரிவாரமூர்த்திகளுக்கு முதற்கட்டமாகக் கடந்த 9-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி ராஜகோபுரம் விமானங்களுக்கு இன்று  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

கும்பாபிஷேகத்தையொட்டி  கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 9-ம் தேதி இரவு முதல் பூஜை நடந்தது. 10 மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு முதல் ஐந்துகால யாகசாலை பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள  நேற்று இரவு 8 மணியளவில் சென்னையிலிருந்து திருச்சி வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி சகிதமாக 8.30 மணி அளவில் திருச்சி திருவானைக்காகோயில் சுந்தர கோபுரம் வழியாக கோயில் உள்ளே சென்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்கப் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராமச்சந்திரன் மற்றும் இணை ஆணையர் ஜெயராமன் உதவி ஆணையர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள், தருமை ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதினம் சத்திய ஞான மகாதேவ தேசிகர் சுவாமிகள் ஆகியோருடன், யாகசாலை பூஜை நடக்கும் இடத்துக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 5-ம் கால பூஜையில் பங்கேற்றார். பின்னர் பூஜை முடிந்தவுடன் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. அதையடுத்து திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு ஓய்வு எடுத்தார். பின்னர் இன்று காலை 6 மணியளவில்  கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டார்.

கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜம்புகேஸ்வரருக்கு முதலில் புனிதநீர்  ஊற்ற நேர்கோட்டில் உள்ள எல்லா கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து சுவாமி மற்றும் அம்மன் வாகனங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவுக்காகத் தமிழகம் முழுவதிலுமிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து சிவனடியார்கள், பக்தர்கள்  ஏராளமானோர் திரண்டிருந்தனர். அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவுக்காகத் திருச்சி மட்டுமல்லாமல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை என பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்ததால் திருவானைக்காவல் கோயில் திணறியது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும், 7 கோபுரங்களில் ராஜகோபுரம் உள்ளிட்ட சில கோபுரங்களைத் தவிர மற்றவற்றில் விளக்கு அலங்காரம் செய்யவில்லை. இதனால், கும்பாபிஷேகம் காண கோயில் கோபுரத்தில் பக்தர்கள், டார்ச் விளக்குகள் மற்றும் செல்போன் லைட்டுகள் மூலம்  ஏறினர். சிலர் வெளிச்சம் பற்றாக்குறையால் கீழே விழுந்தது நடந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க