`சமூகத்தைக் கெடுக்கும் நோக்கில் படம் எடுக்கல!'- வழக்கை ரத்து செய்ய ஏ.ஆர்.முருகதாஸ் முறையீடு | A.R murugadoss Filed a Petition in chennai high court

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (12/12/2018)

கடைசி தொடர்பு:13:40 (12/12/2018)

`சமூகத்தைக் கெடுக்கும் நோக்கில் படம் எடுக்கல!'- வழக்கை ரத்து செய்ய ஏ.ஆர்.முருகதாஸ் முறையீடு

``தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்'' என இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

ஏ.ஆர் முருகதாஸ்

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்து தீபாவளிக்கு வெளிவந்த படம் `சர்கார்'. இந்தப் படத்தில் அரசின் நலத்திட்டங்களைத் தவறாகச் சித்திரித்ததாகவும், ஜெயலலிதாவின் இயற்பெயரை வரலட்சுமி கேரக்டருக்கு பயன்படுத்தியதாகவும் கூறி அ.தி.மு.க-வினர் படம் ரிலீஸான திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து விவகாரம் பெரிதாக, படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தன்னை காவல்துறை கைது செய்யலாம் எனக் கூறி முன்ஜாமீன் கோரி இயக்குநர் முருகதாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முருகதாஸுக்கு முன்ஜாமீன் அளித்தனர். இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நடந்தபோது, அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், 'சர்கார்' படத்தில் அரசுத் திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாதிட்டார். `ஒரு படத்துக்காக மன்னிப்பு கேட்பது என்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. எனவே, அரசின் நலத்திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது. இனி வரும் படங்களில் விமர்சிக்க மாட்டேன் என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது" என்று முருகதாஸ் கூறினார். இந்த நிலையில், திடீரென நேற்று முருகதாஸ் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

இதற்கிடையில் இன்று `சர்கார்' பட தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு அவசர முறையீடு செய்தார். அதில், ‘தன் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் தொடர்ந்துள்ள வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் கதாசிரியர் என்ற முறையிலும் இயக்குநர் என்ற முறையிலுமே `சர்கார்' படத்தில் காட்சிகள் அமைத்தேன். அது அரசின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி தேவராஜ் என்பவர் என்மீது வழக்கு பதிவு செய்துள்ளார். சமூகத்தைக் கெடுக்கும் எந்த நோக்கத்திலும் படம் எடுக்கவில்லை. மக்கள் மனதில் என்ன உள்ளதோ அதையே படமாக்கியுள்ளேன். இதில் எந்தத் தவறும் இல்லை. அதன் அடிப்படையில் அவசர அவசரமாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்” என  குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக முருகதாஸ் தொடர்ந்த முன்ஜாமீன் மனு காலக்கெடு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், இன்று தன் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகல் 2:30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.