ஆ.ராசாவுடன் வலம்வரும் செந்தில் பாலாஜி! - தி.மு.க-வில் இணைகிறாரா? | Former minister was planning to join DMK

வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (12/12/2018)

கடைசி தொடர்பு:17:13 (12/12/2018)

ஆ.ராசாவுடன் வலம்வரும் செந்தில் பாலாஜி! - தி.மு.க-வில் இணைகிறாரா?

முன்னாள் அமைச்சரும் தினகரனின் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி, தி.மு.க-வில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

ராசாவுடன் செந்தில் பாலாஜி

தினகரன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாளை தி.மு.க-வில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தினகரன் அணியுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டவர் செந்தில் பாலாஜி. தனது மாவட்டத்தில் அ.தி.மு.க அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி,  அரசுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டுவந்தார். 

தங்க தமிழ்ச்செல்வன்

இந்த நிலையில்தான், கடந்த சில நாள்களாக செந்தில் பாலாஜி, தினகரன் தரப்பில் இருந்து விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகிவந்தது. அவர் மீண்டும் அ.தி.மு.க செல்வதாகவும், தி.மு.க-வில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பறந்தன. இந்நிலையில், இன்று காலை முதல் செந்தில் பாலாஜி, விரைவில் தி.மு.க-வில் இணைய உள்ளதாகத் தகவல்கள் பரவிவந்தன. இந்தத் தகவலை தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் உறுதியாக மறுத்தார். 

செந்தில்பாலாஜி

இந்நிலையில் செந்தில் பாலாஜி, முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் நடந்துசெல்வது மாதிரியான புகைப்படங்கள் வெளியானது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. தினகரன் தரப்பில் இருந்து அவரிடம் சமாதானம் பேசுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், வெளியான இப்புகைப்படம், அந்தத் தகவலை உறுதிசெய்வதாக உள்ளது என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். நாளை காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இந்த இணைப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பிலோ தி.மு.க தரப்பிலோ உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.