பிரகதீஸ்வரர் கோயிலில் புகுந்த கொள்ளையர்களுக்கு நடந்த ஏமாற்றம்! | Disappointment for robbers in the temple

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (12/12/2018)

கடைசி தொடர்பு:19:00 (12/12/2018)

பிரகதீஸ்வரர் கோயிலில் புகுந்த கொள்ளையர்களுக்கு நடந்த ஏமாற்றம்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள குடியிருப்பில் புகுந்த கொள்ளையர்கள், அங்கு ஒன்றும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றனர். ``தொடர் கொள்ளை சம்பவங்களுக்குக் காரணம் போலீஸார்தான்" என்று குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

                                          

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் பிரசித்திபெற்ற கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தொல்லியல்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கான குடியிருப்பு கோயில் அருகில் திருச்சி - சிதம்பரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே தொல்லியல்துறை அலுவலர்கள் பயன்படுத்தக்கூடிய தளவாடப் பொருள்களான புல்வெட்டும் இயந்திரங்கள், மண்வெட்டி, கடப்பாரை, தண்ணீர் மோட்டார் போன்ற பொருள்களுக்கும்,

                                                        

அலுவலர்களுக்கான வருகைப்பதிவேடு ஆவணங்கள், தளவாடப் பொருள்களுக்கான ஆவணம், பதிவேடுகள் குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் தளவாடப் பொருள்கள், இருப்பு குறித்த ஆவணங்கள், தொல்லியல்துறை அலுவலக வருகைப் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை அங்கு வைக்கப்பட்டிருக்கும். இதை அலுவலகமாக அலுவலர்கள் உபயோகப்படுத்தி வந்தனர். 

                                              

இந்தநிலையில், மர்ம நபர்கள் இந்த அறையில் உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். வெளிப்புற கேட்டை உடைத்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று இரண்டு ஸ்டீல் பீரோக்களை உடைத்துப் பார்த்துள்ளனர். அங்கு பணமோ வேறு எதுவும் கிடைக்காததால் விரக்தியில் அப்படியே போட்டுவிட்டு கொள்ளையர்கள் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனா். 

                                              

இது குறித்து சமூக ஆர்வலர் ராமமூர்த்தியிடம் பேசியபோது, ``அரியலூர் மாவட்டம் முழுவதும் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காவலர்களின் கவனக்குறைவும் குற்றவாளிகளிடம் காவலர்கள் நெருங்கிப் பழகுவதால் போலீஸார் என்ற பயமே போய்க்கொண்டிருக்கிறது. எந்தெந்த ஸ்டேஷனில் உள்ள போலீஸாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படுகிறது என்ற லிஸ்ட்டை ஒரு அக்யூஸ்ட் சொல்கிறான். இது கேவலமாக இல்லையா. இந்த மாதத்தில் மட்டும் ஏழு திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், எத்தனை குற்றவாளிகளைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. குற்றங்களைக் குறைக்க வேண்டும் என்றால் காவல்துறையினர் சரியாக நடந்துகொண்டால் மட்டுமே தீர்வாகும். இல்லையேல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும்" என்று முடித்துக்கொண்டார்.