வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (12/12/2018)

கடைசி தொடர்பு:19:42 (12/12/2018)

"தி.மு.க-வுக்கு செந்தில்பாலாஜி வருவது உறுதிதான்!"- முன்னாள் அமைச்சர் சின்னசாமி தகவல்

"தி.மு.க-வுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வருவது உண்மைதான்" என்று முன்னாள் அமைச்சரும் தி.மு.க மாநில விவசாய அணி செயலாளருமான சின்னசாமி தெரிவித்தார்.

செந்தில்பாலாஜி

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர், செந்தில்பாலாஜி. சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பில் சிக்கி எம்.எல்.ஏ பதவியை இழந்தவர். 'மறுபடியும் எம்.எல்.ஏ ஆகியே தீர்வது' என்று அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலுகாகத் தொகுதியில் அத்தனை ஆயத்தப் பணிகளையும் செய்துவந்தார். இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக, "செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்கு தாவப்போகிறார்" என்ற தகவல் பரபரத்துக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில், வெறும் வதந்தி என்ற அளவில் பேசப்பட்ட இந்தத் தகவல், பிறகு உண்மைதான் என்கிற அளவுக்கு மாறியுள்ளது.

'முன்னாள் அமைச்சரும் தி.மு.க-வின் மாநில விவசாய அணி செயலாளருமான சின்னசாமி மூலமாக தி.மு.க-வுக்கு மாறப்போகிறார்' என்றார்கள். செந்தில்பாலாஜி போவதை உறுதிபடுத்தும் விதமாக, செந்தில்பாலாஜியிடம் சமாதானம் பேச அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான பழனியப்பன் கரூருக்கு வந்தார். ஆனால்,செந்தில்பாலாஜி அவரை சந்திக்காமல் டிமிக்கி கொடுத்தார்.

ரெங்கசாமி (அ.ம.மு.க மாநில பொருளாளர்)

இந்நிலையில், கடந்த 10-ம் தேதி இரவு, கரூருக்கு அ.ம.மு.க-வின் பொருளாளர் தஞ்சை ரெங்கசாமி தலைமையில் முன்னாள்         எம்.எல்.ஏ-க்கள் முருகன், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் கரூருக்கு வருகைதந்து, ரூம் எடுத்து நேற்று மதியம் வரை தங்கினர். ஆனால் செந்தில்பாலாஜி, அவர்களைச் சந்திக்காமல் எஸ்கேப் ஆனார். அவரது போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தகவல் கிடைத்துச் சென்ற செய்தியாளர்களிடம், "நீங்கள் நினைப்பதுபோல் ஒன்றுமில்லை. நாங்கள் கஜா புயல் பாதித்த மக்களுக்கு கட்சி சார்பாக நிவாரணம் கொடுக்க போர்வைகள் பர்சேஸ் பண்ண வந்தோம்" என்று கூறி மழுப்பினார் ரெங்கசாமி. இதற்கிடையில், "செந்தில்பாலாஜியை தி.மு.க-வுக்கு அழைத்துப்போக முயல்வதாகச் சொல்லும் முன்னாள் அமைச்சர் சின்னசாமி, அ.தி.மு.க-வுக்கு தாவப்போகிறார்" என்ற அதிரிபுதிரி தகவலும் எழுந்தது.

ஆனால், இன்று காலை திருமண நிகழ்ச்சிக்கு வந்த சின்னசாமியிடம் பத்திரிகையாளர்கள் சிலர், "நீங்க அ.தி.மு.க-வுக்கு போகப் போறீங்களாமே?" என்று கேட்டனர். சுள்ளென கோபப்பட்ட அவர், "அ.தி.மு.க ஒரு சுடுக்காட்டுக் கட்சி. அதுக்கு நான் போகமாட்டேன். செந்தில்பாலாஜி என் தலைமையில் தி.மு.க-வில் இணைய இருக்கிறார்" என்று சொன்னார். ஆனால் முன்னாள் அமைச்சர் பழனியப்பனோ, சேலத்தில் பத்திரிகையாளர்களிடம், "கண்டிப்பாக செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்குப் போகமாட்டார். அ.ம.மு.க-வில்தான் இருப்பார்" என்று சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், நம்மிடம் பேசிய தி.மு.க முக்கியப் புள்ளிகள் சிலர், "அறிவாலயத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகள் திறக்கப்பட இருக்கும், வரும் 16-ம் தேதி அல்லது 17-ம் தேதிதான் செந்தில்பாலாஜி தி.மு.க-வில் இணையப் போறதா சொன்னாங்க. ஆனால், இப்போ திடீர்னு நாளைக்கு இணையப் போறதா சொல்றாங்க. எது உண்மைன்னு தெரியலை" என்றார்கள்.

சின்னசாமி

முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமியிடமே பேசினோம். ஆரம்பத்தில் பதில் சொல்ல மறுத்தவர், நமது வற்புறுத்தலுக்குப் பிறகு பேசினார்.
 "காலையில் சில நிருபர்கள், நான் அ.தி.மு.க-வுக்கு போகப்போறதா கேள்வி கேட்டதும் அப்படிப் பேசினேன். வேலூரைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரை தி.மு.க-வுக்குள் இணைப்பது பற்றி சமீபத்தில் தளபதிகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அப்போ, செந்தில்பாலாஜி இணைப்பு பற்றியும் சொன்னார். கண்டிப்பாக செந்தில்பாலாஜி தி.மு.க-வில் இணைவது உறுதிதான். வரும் 16-ம் தேதி சென்னையில் தளபதி முன்பு இணைந்துவிட்டு, அதன்பிறகு கரூரில் மிகப்பெரிய கூட்டத்தோடு தி.மு.க-வில் இணைப்பு விழா நடத்தி, முறைப்படி இணைய இருப்பதாகச் சொல்றாங்க. செந்தில்பாலாஜி நல்லா உழைக்கக்கூடிய நபர். அவர் தி.மு.க-வுக்கு வருவதை நான் முழுமனதாக ஏற்கிறேன்" என்றார்.