செல்போனால் வாழ்க்கையைத் தொலைத்த மாணவி! - 4 பேர் சிக்கினர்; ஒருவர் தலைமறைவு | 'Gang who raped the 6th grade student!' - the disaster caused by cellphone

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (12/12/2018)

கடைசி தொடர்பு:19:20 (12/12/2018)

செல்போனால் வாழ்க்கையைத் தொலைத்த மாணவி! - 4 பேர் சிக்கினர்; ஒருவர் தலைமறைவு

ஆம்பூரைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவியை ஒரு கும்பல் பெங்களூருவுக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி வன்கொடுமை வழக்கில் கைதானவர்

வேலூர் மாவட்டம், ஆம்பூர் வாத்திமனையைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவரின் 12 வயது மகள் ஆயிஷா (பெயர் மாற்றம்). இவர், அங்குள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறார். தினமும் காலை, இந்த மாணவி அதே பகுதியைச் சேர்ந்த ஹர்பாஃன் என்பவருடைய ஆட்டோவில் பள்ளிக்குச் செல்வது வழக்கம். அப்போது, மாணவியிடம் ஆசைவார்த்தைக் கூறி ஆட்டோ டிரைவர் பழகியுள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். நேற்று அதிகாலை 4 மணியளவில் பெற்றோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாணவிக்கு ஆட்டோ டிரைவர் போன் செய்துள்ளார். வீட்டுக்கு வெளியே நிற்பதாகக் கூறி வரவழைத்துள்ளார். அப்போது, ஏற்கெனவே தயாராக நிறுத்தப்பட்டிருந்த காரில் தன் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மாணவியின் வாயைப் பொத்தி கடத்தியுள்ளார் அந்த ஆட்டோ டிரைவர்.

பெங்களூருவுக்கு மாணவியைக் கடத்திச் சென்று அங்குள்ள லாட்ஜில் அடைத்து வைத்து ஆட்டோ டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மகள் கடத்தப்பட்டதை அறிந்த தந்தை, ஆம்பூர் மகளிர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் பெங்களூருவுக்கு விரைந்தனர். மாணவியை மீட்டுக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஹர்பாஃன், இர்பாஃன்கான், முதாசீர், சபரேஷ் ஆகிய 4 பேரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். ஷேபாஸ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் பெங்களூருவில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கைதான வாலிபர்கள்

கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் போக்ஸோ மற்றும் கடத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், பிடிபட்ட ஆட்டோ டிரைவர் ஹர்பாஃன் கடந்த ஆண்டு இதேபோல் வசதிப்படைத்த குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைக் கடத்திச் சென்று 20 லட்சம் ரூபாய் பறித்ததாகத் தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.