``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்!’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி! | transport minister m.r.vijayabaskar says about senthil balaji and ammk

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (12/12/2018)

கடைசி தொடர்பு:19:43 (12/12/2018)

``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்!’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி!

``தினகரன் கூடாரம் கரூரில் இன்னும் ஒரு வார காலத்தில் காலியாகும்’’ என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடியாகத் தெரிவித்தார்.

 எம்.ஆர்.விஜயபாஸ்கர் (போக்குவரத்துத்துறை அமைச்சர்)

டி.டி.வி.தினகரன் துணை பொதுச் செயலாளராக இருக்கும் அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர், தி.மு.க-வுக்கு தாவப்போவதாகப் பரபர தகவல்கள் இறக்கைகட்ட ஆரம்பித்திருக்கிறது. வரும் 16 அல்லது 17 -ம் தேதி, அவர் 5,000 ஆதரவாளர்களுடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணையப்போவதாகத் தகவல்கள் உலா வருகின்றன.

தினகரன்

 

இந்நிலையில் டி.டி.வி.தினகரன், செந்தில்பாலாஜியை சமாதானம் செய்து, அ.ம.மு.க-விலேயே தொடரச் செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பழனியப்பன், கட்சியின் பொருளாளர் தஞ்சை ரெங்கசாமி உள்ளிட்ட புள்ளிகளை அனுப்பியும் பயனில்லை. அவர்களை சந்திக்காமல் டிமிக்கிகொடுத்தார் செந்தில்பாலாஜி. ``அ.தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் ஒன்றாக இணைய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்றாங்க. அப்படி இணையும்பட்சத்தில், தன்னால் கரூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மீறி அரசியல் செய்ய முடியாதுனு செந்தில்பாலாஜி நினைக்கிறார். அதனால்தான், தி.மு.க-வுக்குத் தாவ முடிவெடுத்துவிட்டார்" என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.
 

செந்தில் பாலாஜி

இந்நிலையில்தான், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``இன்னும் ஒருவார காலத்துக்குள் அ.ம.மு.க கூடாரம் கரூரில் காலியாகும்" என்று அதிரடியாகப் பேட்டிகொடுத்துள்ளார். கரூரில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கரூர் - திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும். பாலப் பணிகள் தொடர்பான முழுமையான ஆய்வை மேற்கொண்டுள்ளோம். கரூர்-திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே நெரூர்-உண்ணியூர் இடையே போக்குவரத்து உயர்மட்ட பாலம் கட்டப்படும் என மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 1996-ம் ஆண்டு கரூர் வந்தபோது அறிவித்தார். பல்வேறு காரணங்களால் பாலப்பணிகள் தடைப்பட்டபோதும், தற்போது பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர், இதுதொடர்பான ஆய்வை முடித்துள்ளனர். இதுதொடர்பான திட்ட அறிக்கை தயார்செய்த பிறகு, பாலம் கட்டும் பணிகள் ரூபாய் 135 கோடியில் தொடங்கப்படும். இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது, கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்கள் பயன்பெறும். குறிப்பாக, கரூரிலிருந்து சென்னை செல்வதற்குப் போக்குவரத்து எளிமையாக அமையும். மேலும், போக்குவரத்து நெரிசலும் குறையும்.

தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும் என முன்பு கூறியிருந்தேன். மேலும் ஒரு வார கால அவகாசத்தில் முற்றிலுமாக, தினகரன் கூடாரம் கரூர் மாவட்டத்தில் 100 சதவிகிதம் காலியாகும்" என்றார் அதிரடியாக. அப்போது செய்தியாளர்கள், ``செந்தில்பாலாஜி அ.தி.மு.க-வில் இணைய நினைத்தாலும், நீங்களும் அமைச்சர் தங்கமணியும்தான் தடுப்பதாகச் சொல்லப்படுகிறதே... செந்தில்பாலாஜி அ.தி.மு.க-வுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?’’ என்று கேட்டனர். அதற்கு அவர், ``அதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும்தான் முடிவுசெய்வார்கள்" என்றார்.