முகநூலில் முதல்வர் குறித்து அவதூறு: நெல்லையில் கூட்டுறவு சங்கச் செயலாளர் கைது! | a man who spread fake news about ministers in facebook is arrested

வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (12/12/2018)

கடைசி தொடர்பு:22:15 (12/12/2018)

முகநூலில் முதல்வர் குறித்து அவதூறு: நெல்லையில் கூட்டுறவு சங்கச் செயலாளர் கைது!

முகநூலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதற்காக, கூட்டுறவு சங்கச் செயலாளர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவதூறு - கைது

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்புபவர்களை காவல்துறை தீவிரமாகக் கண்காணித்துவருகிறது. பிறர் குறித்து தவறான கருத்துகளைப் பரப்புபவர்கள், வதந்திகளைப் பதிவிடுபவர்கள், சாதி, மத மோதல்களைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பதிவுசெய்பவர்கள் ஆகியோரை சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வழக்குப்பதிவு செய்துவருகிறார்கள். 

ஜெயலலிதா

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள காடன்குளம் கிராமத்தின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மைக்கேல் கார்னேசன் என்பவர், தனது முகநூலில் அவதூறாகக் கருத்துகளைப் பதிவிடுவதாக காவல்துறைக்கு புகார் வந்தது. அவர், தனது முகநூல் பக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாகக் பதிவிட்டுள்ளார்.

பழனிசாமி பன்னீர் செல்வம்

தொடர்ச்சியாக தவறான கருத்துகளைப் பதிவிட்டுவருவதைப் பார்த்த நாங்குநேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவரும் அ.தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளருமான பரமசிவன் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக நெல்லை எம்.பி-யும், அ.தி.மு.க புறநகர் மாவட்டச் செயலாளருமான கே.ஆர்.பி.பிரபாகரன் கவனத்துக்குக் கொண்டுசென்றுள்ளார். அவர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதால், விஜயநாராயணம் காவல் நிலையத்தில் மைக்கேல் கார்னேசன் மீது புகார் அளித்தார்.

போலீஸார், மைக்கேல் கார்னேசனை அழைத்து விசாரணை நடத்தியபோது, முன்னாள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பியதை ஒப்புக்கொண்டதால், அவரைக் கைதுசெய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணைக்குப் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.