வெளியிடப்பட்ட நேரம்: 01:05 (13/12/2018)

கடைசி தொடர்பு:07:12 (13/12/2018)

`கமிஷன் கேட்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்' - பாலபாரதி குற்றச்சாட்டு!

திண்டுக்கல் - சிலுவத்தூர் சாலையில் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் மூன்று ரயில்வே கேட்கள் அமைந்துள்ளன. ரயில் நிலையம் அருகில் இந்தப் பகுதி இருப்பதால் பத்து நிமிட இடைவெளியில் தொடர்ந்து கேட்கள் மூடப்பட்டிருக்கும். ஒரு கேட் திறந்தால் அடுத்த கேட்டில் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. ஒரு வழியாக மக்களின் கோரிக்கையை ஏற்று பாலம் கட்டும் பணியை தொடங்கியது அரசு. ரயில்வே துறை சார்பாகச் செய்ய வேண்டிய வேலைகள் எழுபது சதவிகிதம் செய்து முடிக்கப்பட்ட நிலையில், மாநில அரசின் பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. 

பாலபாரதி

பாலம் கட்டும் பணி தொடங்கியதில் இருந்து, மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலையில் பொதுமக்கள் மேலும், வேதனையைச் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த மாதம் பாலம் கட்டும் பணியை பார்வையிட்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ``நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய பணம் வங்கிக்கு வந்து விட்டது. அனைவருக்கும் பணம் கொடுத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். இன்னும் ஒரு மாதத்தில் பணிகளை தொடங்கி விரைவில் முடித்து விடுவோம்”. என உறுதியளித்தார். 

போராட்டம்
 

அமைச்சர் உறுதியளித்த நிலையிலும், பணிகள் தொடங்கவில்லை. இதனால் பாலகிருஷ்ணாபுரம் சுற்றுவட்டார குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் அனைவரையும் திரட்டி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி. அப்போது, பாலம் வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை கட்டி முடிக்கப்பட்ட சுரங்கப்பாதையை திறந்து விட வேண்டும். பழநி பாதையில் உள்ள கேட்டை திறந்துவிட வேண்டும் எனக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. போராட்டத்தைக் கைவிடக்கோரிய அதிகாரிகள், ``சுரங்கப்பாதையைத் திறக்கவும், பணிகள் விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தனர். ``நீங்கள் சொன்னபடி செய்யாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களைத் திரட்டி காத்திருக்கும் போராட்டம் நடத்துவேன்” என பாலபாரதி தெரிவித்திருந்தார். 

பாலபாரதி

அதிகாரிகள், கொடுத்த வாக்குறுதிகளை வழக்கம்போல கிடப்பில் போட்ட நிலையில், இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தைத் தொடங்கினார் பாலபாரதி. அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், ``பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கும் நிலையில், பணிகள் மிகவும்  தாமதமாகிறது. ரயில்வே நிர்வாகம் செய்ய வேண்டிய பணிகளை கிட்டத்தட்ட முடித்து விட்டார்கள். மாநில அரசு, நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீட்டைக் கொடுத்து விட்டால் பணிகளைத் தொடங்க எந்தத் தடையும் இல்லை. ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பே பணம் வங்கிக்கு வந்துவிட்டது என வனத்துறை அமைச்சர் சொன்ன நிலையில், இதுவரை யாருக்கும் பணம் கிடைக்கவில்லை. வங்கிக்கு வந்த பணம் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுப்பதில் ஏன் இத்தனை தாமதம்? இந்த தாமதத்துக்கு வனத்துறை அமைச்சர்தான் காரணம்.

திண்டுக்கல் சீனிவாசன்

அவர் கமிஷன் எதிர்பார்ப்பதால் பணத்தைக் கொடுக்க அதிகாரிகள் தயங்குகிறார்கள் எனத் தோன்றுகிறது. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல பேசுகிறார் அமைச்சர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக செய்து தர வேண்டும். கூட்டத்துக்கு வரும் பொதுமக்களை போலீஸை வைத்து மிரட்டும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தீவிரமாகும்” என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, பாலபாரதி மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க