திருச்செந்தூரில் வெளிமாநில மதுபானம் கடத்த முயன்றவர் கைது! | man arrested for abducting foreign liquor in Tiruchendur

வெளியிடப்பட்ட நேரம்: 04:34 (13/12/2018)

கடைசி தொடர்பு:07:42 (13/12/2018)

திருச்செந்தூரில் வெளிமாநில மதுபானம் கடத்த முயன்றவர் கைது!

திருச்செந்தூரில் வெளிமாநில மதுபாட்டில்களை பதுக்கி காரில் கடத்த முயன்றவரை போலீஸார் கைது செய்தனர். ரூ.2.5 லட்சம் மதிப்புள்ளா 2,457 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுபானம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் வெளி மாநில மதுபாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து திருச்செந்தூர் தாலுகா போலீஸார் திருச்செந்தூர் -  தூத்துக்குடி சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், வெள்றை நிறச் சாக்கில் வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

மதுபானம்

காரை ஓட்டிவந்த வீரபாண்டியன்பட்டணத்தைச் சேர்ந்த நாராயணன் என்ற பாலாவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து திருச்செந்தூர் பகுதியில் விசேஷ நாள்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. அவரது வீட்டில் மண்ணில் பதுக்கி வைத்திருந்த மேலும் 2,000 மதுபாட்டில்கள்,  33 புல் மதுபாட்டில்கள் என மொத்தமுள்ள 2,457 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் மதிப்பு ரூ.2.5 லட்சம்  என போலீஸார் கூறினர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நாராயணனை, இப்பகுதியில் 5 ரூபாய் காயின் பாலா என அழைக்கப்படுவது உண்டு. கடந்த 1999-ம் ஆண்டு இரும்பு பட்டறையில் 5 ரூபாய் நாணயத்தை போலியாகத் தயாரித்து பொதுமக்களிடம் புழக்கத்தில் விட்டதாக இவர் ஏற்கெனவே போலீஸாரால் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுபானம்

கடந்த செப்டம்பர் மாதம் திருச்செந்தூர் அருகில் உள்ள அடைக்கலாபுரத்தில் இதேபோல் 2,500 போலி மதுபாட்டில்கள்,  அவை தயாரிக்கத் தேவையான ஸ்பிரிட், போலி லேபிள்கள் ஆகியவற்றை மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்து போலி மதுபானம் தயாரித்தவர்களை கைது செய்தனர். தற்போது அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக வெளிமாநில மதுபாட்டில்கள் பிடிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க