மூன்றாம் முறையாகப் புத்துணர்வு முகாமுக்குப் புறப்பட்ட ராமேஸ்வரம் ராமலட்சுமி! | Rameswaram Ramalakshmi who went to the refreshing camp for the third time

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (13/12/2018)

கடைசி தொடர்பு:10:15 (13/12/2018)

மூன்றாம் முறையாகப் புத்துணர்வு முகாமுக்குப் புறப்பட்ட ராமேஸ்வரம் ராமலட்சுமி!

 ராமேஸ்வரம் கோயில் யானை ராமலட்சுமி தேக்கம்பட்டியில் நடைபெறும் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதாக நேற்று இரவு புறப்பட்டுச் சென்றது.

தேக்கம்பட்டி முகாமிற்கு சென்ற ராமேஸ்வரம் ராமலட்சுமி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலட்சுமி என்ற 16 வயது கொண்ட பெண் யானை உள்ளது. தொழிலதிபர் ராமசுப்பிரமணிய ராஜாவால் ராமலட்சுமி யானை ராமேஸ்வரம் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. 7 வயது குட்டியாக ராமேஸ்வரம் கோயிலுக்கு வழங்கப்பட்ட ராமலட்சுமி ஏற்கெனவே கோயிலில் இருந்து வந்த பவானி என்ற யானையுடன் சேர்ந்து கோயில் திருவிழாக்கள் மற்றும் சுவாமி வீதி உலாக்களில் பங்கேற்று வந்தது.

யானை

 இந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு யானைகள் புத்துணர்ச்சி முகாமுக்குச் சென்ற பவானி, ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்தது. இதனால் ராமலட்சுமி மட்டும் தனித்து விடப்பட்ட நிலையில் 2014-ம் ஆண்டு புத்துணர்வு முகாமுக்குச் சென்று திரும்பியது. இதனிடையே ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் மாசித் திருவிழா போன்றவற்றால் அடுத்து வந்த 2 ஆண்டுகளாக ராமலட்சுமி புத்துணர்வு முகாமுக்குச் செல்லவில்லை. கடந்த ஆண்டு 2-ம் முறையாக முகாமுக்குச் சென்று வந்தது ராமலட்சுமி.

ராமலட்சுமி

 இந்த நிலையில்,  நாளை  தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் வனப்பகுதியில் இந்த ஆண்டுக்கான புத்துணர்வு முகாம் துவங்க உள்ளது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக ராமலட்சுமி யானை நேற்று இரவு ராமேஸ்வரத்திலிருந்து லாரியில் புறப்பட்டுச் சென்றது. முன்னதாக ராமலட்சுமி புத்துணர்வு முகாமுக்குச் செல்வதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டது. பயணத்தின்போது ராமலட்சுமியின் உடல் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்ய ஏதுவாகக் கால்நடை மருத்துவர் குழுவும் உடன் செல்கிறது.

இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார்கள் கஹாரின், கமலநாதன், கண்ணன், செல்லம் மற்றும் திருக்கோயில் பணியாளர்களும், பக்தர்களும் பங்கேற்றனர்.