உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - சென்னை வானிலை மையம் தகவல் | very heavy rain in isolated places over north coastal Tamilnadu and Puducherry

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (13/12/2018)

கடைசி தொடர்பு:12:20 (13/12/2018)

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த 48 மணி நேரத்துக்கு வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. கடந்த மாதம் வங்கக் கடலில் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களைச் சூறையாடிக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து உருவான காற்றழுத்தத் தாழ்வு அழுத்தத்தினால் வடதமிழகம் மற்றும் ஆந்திராவில் ஆங்காங்கே பரவலான மழை பெய்தது. 

மழை

இதையடுத்து, தெற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கிறது என முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 

நாளை வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று வட தமிழகத்தில் பல இடங்களில் மிக கனமழை பொழியும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் பல இடங்களில் பரவலாக மழை பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த நான்கு நாள்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கடலுக்குச் சென்றவர்கள் விரைவில் கரை திரும்ப வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.