`நீ ஒரு டியூப்லைட்; உனக்கு ஒண்ணுமே புரியவில்லையா!'- மாடலிங் பெண் ஆடியோ சர்ச்சையில் இயக்குநர் | Allegations against cinema director

வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (13/12/2018)

கடைசி தொடர்பு:19:24 (13/12/2018)

`நீ ஒரு டியூப்லைட்; உனக்கு ஒண்ணுமே புரியவில்லையா!'- மாடலிங் பெண் ஆடியோ சர்ச்சையில் இயக்குநர்

இயக்குநர் மீது புகார் கொடுத்தவர்கள்

``உன்னைச் சுட்டிப்பொண்ணுன்னு டைரக்டரிடம் நிரூபித்தால் அம்பாஸிடர் காரில் செல்லும் நீ பி.எம்.டபுள்யூ காரில் செல்லலாம் என்று காஸ்டிங் இயக்குநர் என்னிடம் கூறினார்'' என மாடலிங் பெண் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  

பெங்களூருவைச் சேர்ந்த துணை நடிகையும், சென்னையைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா காஸ்டிங் இயக்குநர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மேற்பார்வையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், காஸ்டிங் இயக்குநர் குறித்து மாடலிங் பெண் ஒருவர் ஏழு நிமிட ஆடியோ ஒன்றை நமக்கு அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, ``நான் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். எனக்கு அப்பா கிடையாது. அம்மா, எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். அப்போதுதான் அந்த காஸ்டிங் இயக்குநர் எனக்கு அறிமுகம் கிடைத்தது. இதனால், அவரைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னை தங்கச்சி என்று அன்பாக அழைப்பார். நானும் அவரை அண்ணன் என்றுதான் கூப்பிடுவேன். அந்த இயக்குநர், என்னிடம் நான் யாருக்கும் பெண்களின் போட்டோவை அனுப்ப மாட்டேன். நீ, தேவையில்லாமல் உன்னுடைய படங்களை சமூகவலைதளங்களில் பதிவு செய்யாதே என்று அவர் எனக்கு அறிவுரை கூறினார். இதனால், நான் அந்த இயக்குநரை முழுமையாக நம்பினேன். 

அந்த இயக்குநர் என்னை ஒருநாள் அவரின் வீட்டுக்கு அழைத்தார். நான் தனியாக செல்ல பயந்து இன்னொரு மாடலிங் பெண்ணையும் அழைத்துச் சென்றேன். அந்த வீட்டில் நான் அழைத்துச் சென்ற மாடலிங் பெண், ஒரு சாரிடம் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் நான் அங்கு நின்றேன். அப்போது அங்கு வந்த அந்த இயக்குநர், நீ அறையில் இருக்கும் டைரக்டர்களிடம் பேசிக் கொண்டிரு என்று தொல்லைப்படுத்தினார். உடனே நான் எப்படி தனியாக அங்கு செல்வது என்று அந்த இயக்குநரிடம் கூறினேன். அதன்பிறகு அந்த அறைக்குச் சென்று நார்மலாக பேசினோம். நான் ஒரு பெரியாரிஸ்ட். இதனால், அதுதொடர்பாக பேசினேன்.

அந்த மியூசிக் டைக்டருக்கு சொந்த ஊர் டெல்டா மாவட்டம் என்று கூறினார். எனக்கும் அந்த மியூசிக் டைக்டரின் ஊர்தான் என்பதால் நன்றாக பேசினோம். அடுத்தநாள் அந்த இயக்குநர் என்னை போனில் அழைத்தார். நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறினார். நான் எதுவாக இருந்தாலும் போனில் பேசுங்கள் என்று கூறினேன். உடனே, அவர் என்னை வீட்டுக்கு வரும்படி கட்டாயப்படுத்தினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதன்பிறகு, அவரின் வீட்டின் அருகில் உள்ள ஹோட்டலில் சந்தித்தோம். அப்போது அந்த மியூசிக் டைரக்டர் உன்னை செலக்ட் செய்துவிட்டார் என்று கூறினார். மூன்று விளம்பர படங்களில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். அதைக்கேட்டதும் நான் சந்தோஷம் அடைந்தேன். நான் உனக்கு நல்ல அண்ணனா சொல்கிறேன். நான் சொல்கிறபடி நீ கேட்டால் உனக்கு நல்ல ஆஃபர் கிடைக்கும் என்றார். அப்போது அந்த இயக்குநரிடம் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அவர், டெடிட்கேசனாக இருக்க வேண்டும் என்று கூறினார். 

 இயக்குநர் மீது கொடுக்கப்பட்ட புகார்

உன்னை அவருக்குப் பிடித்திருக்கிறது. அவர் உன்னை கேட்கிறார் என்று கூறினார். எதற்கு கேட்கிறார் என்று அவரிடம் அப்பாவியாக கூறினேன். அப்போது அவர், நீ ஒரு டியூப்லைட் உனக்கு ஒண்ணுமே  புரியவில்லையா என்று கூறிக்கொண்டு ஒரு டயலாக் சொன்னார்.  `எத்தனை நாளுக்குதான் அம்பாஸிடர் காரில், சாதாரண காரில் போய்கிட்டு இருப்ப. அதையெல்லாம் சம்பாதிக்க இதையெல்லாம் பண்ணதான் வேண்டும். நீ சாதாரண பெண் என்றால் உன்னிடம் இதைச் சொல்ல மாட்டேன். நாளைக்கு நீ அந்த மியூசிக் டைரக்டரை அடித்துவிட்டால் வம்பாகிவிடும்' என்றுதான் உன்னிடம் சொல்கிறேன். இதனால் அவரிடம் சண்டை போடாமல் அமைதியாகி கிளம்பிவிட்டேன். வீட்டில் போய் யோசித்து சொல்வதாகக் கூறிவிட்டு அந்த இயக்குநரிடமிருந்து தப்பித்து வந்தேன். வீட்டுக்குப் போய் அந்த இயக்குநர் குறித்து அம்மாவிடம் கூறினேன். உடனே, அம்மா, நீ போலீஸில் புகார் கொடுத்தால் உன்னை வாழ விடமாட்டார்கள். கடவுள் புண்ணியத்திலே தப்பிவந்துவிட்டாய் என்று எனக்கு ஆறுதல் கூறினார்கள். பலநாள் திருடன் ஒருநாள் சிக்குவான் என்பதைப் போல தற்போது அந்த இயக்குநர் சிக்கிவிட்டார். எனக்கு மட்டும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தால் என் குடும்பமே தற்கொலை செய்திருக்கும்'' என்பதோடு அந்த ஆடியோ முடிவடைகிறது. 

காஸ்டிங் இயக்குநர் குறித்து சென்னையைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் கூறுகையில், ``கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஃபேஸ்புக் மூலம் அவர் எனக்கு அறிமுகமாகினார். என் படிப்புக்கு ஏற்ற வேலையை தனியார் நிறுவனத்தில் வாங்கி கொடுத்தார். என்னை தங்கச்சி என்றுதான் அவர் அழைப்பார். நானும் அவரை அன்போடு அண்ணன் என்றுதான் கூப்பிடுவேன். சில காரணங்களுக்காக என் வேலையை விட்டு விலகினேன். அதன்பிறகு வேலை தேடினேன். அப்போது, காஸ்டிங் இயக்குநர் இன்னொரு இடத்தில் எனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறினார். அங்கு சென்றபோது அந்த நிறுவனத்தின் மேலாளர் என்னிடம் தவறாகப் பேசினார். இதனால் ஆஃபர் லெட்டர்கூட வாங்காமல் வந்துவிட்டேன். இந்தச்சமயத்தில்தான் என்னை அவர் வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் சேர்த்துவிட்டார். அந்தக் குரூப்பில் ஏராளமான மாடலிங், சீரியல் நடிகைகள், சினிமா துணை நடிகைகள் இருந்தனர். 

ஒருநாள் என்னிடம் பேசிய அண்ணன், தங்கச்சி நீ மாடலிங் செய். நிறைய பணம் கிடைக்கும் என்று கூறினார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால், அவர் என்னைக் கட்டாயப்படுத்தினார். அதன்பிறகு என்னைப் பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் தவறாக சித்திரித்துச் சொல்வேன் என்று மிரட்டினார். இதனால் அவரிடமிருந்து விலக ஆரம்பித்தேன். ஆனால், அவர் என்னைத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார். ஒருகட்டத்தில் என்னுடைய நிர்வாணப் போட்டோவை  வாட்ஸ்அப்பில் அனுப்பும்படி கேட்டார். நான் முதலில் சம்மதிக்கவில்லை. அதன்பிறகு மூன்று கிளாமர் போட்டோவை அனுப்பினேன். அதைப்பார்த்த அவர், உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறினார். அதன்பிறகு அவர் பேசிய பேச்சுக்கள் என்னை தர்மசங்கடப்படுத்தியது. அவர் எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்கள் எல்லாம் ஆதாரமாக இருக்கிறது. அதன்அடிப்படையில்தான் போலீஸில் புகார் கொடுத்துள்ளேன்'' என்றார். 

காஸ்டிங் இயக்குநரால் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் ஆதாரங்களை போலீஸாரிடம் வழக்கறிஞர் அபிமன்யூ கொடுத்துள்ளார். இதனால் காஸ்டிங் இயக்குநரிடம் விரைவில் போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

காஸ்டிங் இயக்குநரிடம் போனில் பேசினோம். ``அவர், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்னைச் சிக்க வைக்க சதி நடக்கிறது" என்றார். அதன்பிறகு தன்னுடைய வழக்கறிஞரிடம் விளக்கத்தை கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார். அவரின் வழக்கறிஞர் கூறுகையில், ``என்னுடைய கட்சிக்காரர் மீது பொய்ப் புகார் கொடுத்துள்ளனர். புகாரில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதற்கான ஆதாரங்கள் அவர்களிடம் உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும். இதுவரை எங்களிடம் போலீஸார் விசாரிக்கவில்லை" என்றார்.