`காதலித்தேன்... தப்பு பண்ணினாள்... கொலை செய்துட்டேன்' - போலீஸிடம் புலம்பிய கணவன் | Husband Murdered his wife in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (13/12/2018)

கடைசி தொடர்பு:15:49 (13/12/2018)

`காதலித்தேன்... தப்பு பண்ணினாள்... கொலை செய்துட்டேன்' - போலீஸிடம் புலம்பிய கணவன்

கொலை செய்யப்பட்ட லேகா கணவர் டேவிட்

சென்னையில், காதலித்துத் திருமணம்செய்த மனைவியை நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

சென்னை சேத்துப்பட்டு, அப்பாராவ் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர், லேகா (30). இவரின் கணவர் டேவிட் (44). இருவரும் கடந்த 2004-ம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 13 வயதிலும் 12 வயதிலும் இரண்டு மகள்கள் உள்ளனர். அமைந்தகரையில் குடும்பம் நடத்தினர்.

ஆரம்பத்தில் சந்தோஷமாகச் சென்ற இவர்களின் வாழ்க்கையில் திடீரென புயல் வீசத் தொடங்கியது. வேலைக்கு சரிவர செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையான டேவிட், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் நிம்மதியில்லை. இதனால் கணவரைப் பிரிந்த லேகா, சேத்துப்பட்டு அப்பாராவ் தோட்டத்தில் தனது குழந்தைகளுடன் வாழ்ந்துவந்தார்.  அப்போது, லேகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, அவர்கள் ஒரே வீட்டில் குடியிருந்துள்ளனர். 

 காதல் மனைவியை கொலை செய்த டேவிட்

இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட டேவிட் ஆத்திரமடைந்தார். நேற்று மாலை குடித்துவிட்டு சேத்துப்பட்டுக்கு வந்தார். அப்போது சாலையில் லேகா நடந்து சென்றார். அதைப்பார்த்த டேவிட், அவரை வழிமறித்து தகராறுசெய்தார். அப்போது, நீ தப்பு பண்ணிவிட்டாய், அதை நான் மன்னித்துவிடுகிறேன், குழந்தைகளுக்காக நாம் சேர்த்துவாழ்வோம் என்று கூறியுள்ளார். அதை லேகா கேட்கவில்லை.  அதனால், இருவருக்குமிடையே மீண்டும் நடுரோட்டில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லேகா, தகாத வார்த்தைகளால் டேவிட்டைத் திட்டியதாகத் தெரிகிறது. ஆத்திரம் அடைந்த அவர், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் லேகாவை சரமாரியாகத்  குத்தினார். ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள், சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

லேகாவின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தப்பிஓட முயன்ற  டேவிட்டை போலீஸார்  கைதுசெய்து விசாரித்தனர். அப்போது அவர், ''காதலித்துத் திருமணம் செய்தேன். அவள் தப்பு பண்ணினாள், மன்னித்து மீண்டும் வாழ பேசினேன். ஆனால் அவள் கேட்கவில்லை.  அதனால், தாலிக்கட்டிய இதே கையால் அவளை குத்திக் கொன்னுட்டேன்'' என்று போலீஸாரிடம் புலம்பியுள்ளார். விசாரணைக்குப் பிறகு டேவிட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார்,  சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.