`ஆறுதலாகப் பேசினார்... இப்படிப் பண்ணிட்டார்' - 81 வயது குப்பாபாயின் மகள் புலம்பல்  | 81 years woman shares her bitter experience

வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (13/12/2018)

கடைசி தொடர்பு:16:18 (13/12/2018)

`ஆறுதலாகப் பேசினார்... இப்படிப் பண்ணிட்டார்' - 81 வயது குப்பாபாயின் மகள் புலம்பல் 

81 வயது குப்பாபாய்

81 வயதுடைய குப்பாபாய் சடலத்தை ஆம்புலன்ஸில் கொண்டு வர மகள் ருக்மணி சிரமப்பட்டபோது உதவிய நபர், குப்பாபாய் அணிந்திருந்த நகை, பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார்.  

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி ‘டி’ பிளாக்கைச் சேர்ந்தவர் லதா என்ற ருக்மணி (41). இவரின் தந்தை ஸ்ரீராமுலு.  
தலைமைக் காவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். ருக்மணியின் தாயார் 
குப்பாபாய் (81). இவருக்கு 7 பிள்ளைகள். அதில் கடைசி மகளான ருக்மணியுடன் குப்பாபாய் வசித்து வந்தார். திருமணம் 
செய்துகொள்ளாமல் தாயுடன் ருக்மணி வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி குப்பாபாய்க்கு வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. தாயாரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ருக்மணி கொண்டு சென்றார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைப் பலனின்றி குப்பாபாய் இறந்தார்.

அவரின் சடலத்தை வீட்டுக்குக் கொண்டு செல்லத் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் பேசினார். அப்போது அவர் கேட்ட பணம் ருக்மணியிடம் இல்லை. ஆறுதல் சொல்லவும் உதவி செய்ய யாருமில்லாததாலும் தவித்த ருக்மணியிடம் காக்கி பேன்ட் அணிந்து கொண்டு வந்த ஒருவர், தன்னை ஒரு போலீஸ்காரர் என்றும் தன்னுடைய பெயர் ராஜேஷ் என்றும் அறிமுகம் செய்தார். அதன் பிறகு ஆம்புலன்ஸ் டிரைவரிடம் ராஜேஷ் பேரம் பேசி, குப்பாபாய் சடலத்தை வீட்டுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். இதனால் ருக்மணி அவருக்கு நன்றி சொல்ல, அவரோ என்னால் முடிந்த உதவியைச் செய்தேன் என்று கூறினார். அதன் பிறகு, குப்பாபாயின் சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றினார். பின்னர் அதே ஆம்புலன்ஸில் அவர் வீடு வரை வந்தார். சடலத்தை வீட்டில் இறக்கிய பிறகு ருக்மணிக்கு  ஆறுதல் கூறினார்.  

81 வயது குப்பாபாயின் மகள்

குப்பாபாயின் சடலத்தை வீட்டுக்குக் கொண்டு வந்தபிறகு, அஞ்சலிக்காக வைக்கவும் ராஜேஷ் உதவி செய்துள்ளார். அப்போது, அவர், ருக்மணியிடம், ‘‘ஆயா (உங்கள் அம்மா) அணிந்துள்ள தங்க நகைகளைக் கழற்றி அவரின் தலைக்கு மேலே வையுங்கள். நகைகளோடு பணத்தையும் வைத்தால் அவரின் ஆன்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என்று கூறியுள்ளார். அதை நம்பிய ருக்மணியும் தனது தாயார் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்க நகைகளையும் 5,000 ரூபாயையும் அவரின் தலைக்கு அருகில் வைத்தார். அப்போது பால் எடுத்து வருவதற்காக ருக்மணி சமையலறைக்குள் சென்றார்.  

திரும்பி வந்து பார்த்தபோது அங்கு அமர்ந்திருந்த நபரைக் காணவில்லை. குப்பாபாயின் உடலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், பணமும் மாயமாகியிருந்தது. இதையடுத்து நடந்த சம்பவத்தை ருக்மணி தன்னுடைய மூத்த சகோதரி விஜயலட்சுமியிடம் கூறினார். இதையடுத்து ருக்மணி அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் நகைகளைக் திருடிய நபர் தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனால், போலீஸார் அந்த நபர் யார் என்று விசாரித்துவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கவனத்தைத் திசை திருப்பித் திருடியுள்ளனர். திருமண நிகழ்ச்சி, துக்க வீடு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில்தான் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்கள் நடப்பதுண்டு. ருக்மணிக்கு உதவி செய்வதுபோல நடித்து அவர் நகை, பணத்தைத் திருடியுள்ளார். அவரின் உருவம், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்மூலம் அவர் குறித்த விவரங்களைச் சேகரித்துவருகிறோம். மேலும், ஆம்புலன்ஸ் டிரைவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இதனால் விரைவில் குப்பாபாயின் சடலத்தின் அருகிலிருந்து நகை, பணத்தைத் திருடிய நபரைக் கைதுசெய்துவிடுவோம்" என்றனர்.