`இது யாருடைய பெட்ரோல் பங்க் தெரியுமா?' - கலப்படத்தைத் தட்டிக்கேட்ட மாணவர்களை மிரட்டிய ஊழியர்கள் | Petrol bunk staffs threatning students

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (13/12/2018)

கடைசி தொடர்பு:18:20 (13/12/2018)

`இது யாருடைய பெட்ரோல் பங்க் தெரியுமா?' - கலப்படத்தைத் தட்டிக்கேட்ட மாணவர்களை மிரட்டிய ஊழியர்கள்

கலப்பட பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாகக் கூறிய சட்டக்கல்லூரி மாணவர்களை பங்க் ஊழியர்கள் மிரட்டினர். இதனால் ஆவேசம் அடைந்த மாணவர்கள், மறியலில் ஈடுபட்டதால் திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெட்ரோல் பங்க்

திருவள்ளூரை அடுத்த வரதாபுரம் பகுதியில், சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இங்கு இளநிலை மற்றும் முதுநிலை சட்டம் படிக்கும் மாணவர்கள், விடுதியில் தங்கிப் படித்துவருகின்றனர். நேற்று மாலை 5 மணி அளவில், திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பாண்டூர் என்ற கிராமத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குச் சொந்தமான ஜெய பவித்ரா என்ற பெட்ரோல் பங்க் இயங்கிவருகிறது.

பெட்ரோல் பங்கில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் பெட்ரோல் போட்டுள்ளனர்.  அப்போது, வண்டி உடனடியாக ஸ்டார்ட் ஆகவில்லை. இது தொடர்பாக சட்ட கல்லூரி மாணவர்கள், பெட்ரோல் நிலையத்தில் வேலைசெய்பவர்களிடம்... வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை, கலப்பட பெட்ரோல் விற்பனை செய்கிறீர்களா என்று கேட்டுள்ளனர். அப்போது, மாணவர்களுக்கும் பெட்ரோல் பங்க் நிறுவன ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் சாலை மறியல்

இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் மேலாளர், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் செல்போனில் சமரசம் பேச முயன்றுள்ளனர். ஆனால் மாணவர்கள்  செல்போனை வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சட்டக்கல்லூரி மாணவர்கள், விடுதியில் தங்கியிருந்த மற்றும் கல்லூரியில் இருந்த அனைத்து மாணவர்களையும் வரவழைத்து,  திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் நிர்வாகத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக ஜெய பவித்ரா பெட்ரோல் பங்க் நிர்வாகி ஜெயசேகர் பாபு என்பவரிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டோம். "வெளியூரில் வந்து ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி எங்கள் பெட்ரோல் பங்குக்கு வந்து 50 ரூபாய் மற்றும் 20 ரூபாய் 30 ரூபாய்க்கு பெட்ரோல் போடச் சொல்கிறார்கள். சில நேரங்களில் தகராறும் செய்கிறார்கள். அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டோம். நேற்று, திட்டமிட்டு சண்டை போடும் எண்ணத்துடன் மாணவர்கள் எங்களது ஊழியர்களிடம் சண்டை போட்டுள்ளனர்" என்று கூறினார்.

இதுதொடர்பாக, திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரனிடம் ஜெயபவித்ரா பெட்ரோல் பங்க் மேலாளர் ரமேஷ் என்பவர் புகார் அளித்திருப்பதாக நிர்வாகி ஜெயசேகர் பாபு தெரிவித்தார்.

மறியலில் ஈடுபடும் மாணவர்கள்

சட்டக்கல்லூரி மாணவர்கள் தரப்பில், "நாங்கள் எப்போதும்  20 ரூபாய்க்கெல்லாம் பெட்ரோல் போடச் சொன்னதில்லை. பல நேரங்களில் பெட்ரோல் போட்டிருக்கிறோம். வண்டி உடனடியாக ஸ்டார்ட் ஆவதில்லை. அதனால், பெட்ரோலில் கலப்படம் செய்கிறீர்களா என்று கேட்டோம். அதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இது யாருடைய பெட்ரோல் பங்க் தெரியுமா என்று எங்களை அடிக்கப் பாய்ந்து மிரட்டினார்கள். அதனால்தான் நாங்கள் பெட்ரோல் பங்க்  நிர்வாகத்தைக் கண்டித்து போலீஸிலும் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்க இருப்பதாகத் தெரிவித்தனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த சாலை மறியலால், திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த பெட்ரோல் பங்க், அ.தி.மு.க எம்பி ஒருவருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.