வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (13/12/2018)

கடைசி தொடர்பு:19:00 (13/12/2018)

முதல் கல்லை எடுத்துக்கொடுத்த ராமதாஸ்! - விமரிசையாக நடந்த குரு நினைவு மணிமண்டபம் அடிக்கல்

மாநில வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி ஜெ.குருவுக்கு நினைவு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காடுவெட்டி கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

முதல் கல்லை எடுத்துக்கொடுக்கும் ராமதாஸ்

மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும் இருந்த காடுவெட்டி குரு, உடல்நிலை குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் 25-ம் தேதி காலமானார். அவரது உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குரு மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா

 

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, காடுவெட்டி குருவின் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், குரு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என இரங்கல் நிகழ்ச்சியின்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட சில குழப்பங்கள் காரணமாக, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குருவுக்கு மணிமண்டபம் கட்ட அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், காடுவெட்டி கிராமத்தில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த ரவி, ராமதாஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க தங்களுடைய குடும்பச் சொத்தான சென்னை டு கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 50 சென்ட் இடத்தைத் தானமாக வழங்கினர்.

அன்புமணி

அந்த இடத்தில், இன்று மணிமண்டபம் கட்டுவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி மற்றும் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் வந்திருந்து மணி மண்டபத்திற்கான முதல் செங்கல்லை ராமதாஸ் எடுத்துக்கொடுத்து தொடங்கிவைத்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, ”தமிழகத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் சந்திக்கவும், அதை எதிர்கொள்ளவும் பா.ம.க தயாராக உள்ளது. இதற்கான பணிகளைக் கடந்த 9 மாதங்களாகச் செய்துவருகிறேன். நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்" என்று கூறினார்.

அன்புமணி- ராமதாஸ்

தேர்தல் கூட்டணி குறித்துக் கேட்டபோது, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.

தொடர்ந்து, குருவின் குடும்பத்திற்குள் சர்ச்சைகள் நிலவுகிறதே என்று செய்தியார்கள் கேட்டபோது, இதுகுறித்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று முடித்தார் அன்புமணி.