`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன?' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன் | Vanathi Srinivasan explain about 5 state election

வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (13/12/2018)

கடைசி தொடர்பு:12:28 (17/12/2018)

`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன?' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இதில், தெலங்கானாவில் 88 இடங்களைக் கைப்பற்றி டி.ஆர்.எஸ் கட்சியும், மிசோரத்தில் 26 இடங்களைக் கைப்பற்றிய மிசோ தேசிய முன்னணி கட்சியும் ஆட்சியமைக்க உள்ளன. மற்ற மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. பா.ஜ.க-வுக்குப் பெரும் பின்னடைவாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்தை அக்கட்சியின் நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.

` 5 மாநிலத் தேர்தல் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என வானதியிடம் கேட்டோம்.  

`` இதை நாங்கள் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்கிறோம். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு எங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். ராஜஸ்தானில் 0.5 சதவிகித வாக்குகள், மத்தியப் பிரதேசத்தில் 1 சதவிகித வாக்குகள் என காங்கிரஸை விட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளோம். சத்தீஸ்கரில் 21 தொகுதிகளில் 100 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டுள்ளோம். ஒவ்வொரு மாநிலத்தையும் தனித்தனியாகப் பார்த்தால், நூலிழையில்தான் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டுள்ளோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில், நூலிழைத் தவறுகள்கூட ஏற்படாதவண்ணம் செயல்பட இருக்கிறோம். தீவிரமாக கட்சிப் பணியாற்றி, மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைக்கத் தயாராகிவருகிறோம்". 

`நூலிழையில் தோல்வி' என்றால் இதை `வெற்றிகரமான தோல்வி'யாக எடுத்துக்கொள்ளலாமா?

`` அதைப்பற்றி நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை." 

இரண்டு மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன. இதை எப்படி எடுத்துக்கொள்வது? 

`` தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் ஆட்சிதான் நடைபெற்றுவந்தது. அவர் மீண்டும் வெற்றிபெற்றதை மாநிலக் கட்சிகளின் எழுச்சியாகக் கருத முடியாது. மற்ற மாநிலங்களைப்போல அங்கும் மாநிலக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. எனவே, அதைப் பெரும் வெற்றி எனக் கூற முடியாது."  

அப்படிப் பார்த்தால், தெலங்கானா மற்றும் மிசோரத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும்தானே பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது? 

`` தெலங்கானாவில் எங்களுக்கு சற்று அதிகமான இடங்கள் இருந்தன. ஆனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்பதற்காக, அனைத்து வாக்குகளும் டி.ஆர்.எஸ் கட்சிக்குச் சென்றுவிட்டன. அதனால், அங்கு எங்களுடைய வாக்குகள் பிரிந்துவிட்டன. முந்தைய தேர்தல் போல இந்தமுறை வெற்றிபெற முடியவில்லையே தவிர, எங்கள் வாக்கு சதவிகிதம் கணிசமாகவே உயர்ந்துள்ளது.'' 

மோடியிடம் இருந்து 2 பாடங்களைக் கற்றதாகக் கூறியிருக்கிறாரே ராகுல்? 

`` நரேந்திர மோடியிடம் இருந்து அவர் கற்றுக்கொள்வதற்கு இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. காங்கிரஸ் என்ற மிகப்பெரும் பாரம்பார்யத்தில் இருந்து வந்தவர் ராகுல் காந்தி. அவரே, `எது செய்ய வேண்டும்; எதைச் செய்யக் கூடாது என்பதை மோடியிடமிருந்து கற்றுக்கொண்டேன்' என்கிறார். இதிலும், அவர் மீண்டும் மோடியைப் பின்பற்றும் சூழலே உள்ளது. ராகுல் காந்தி, ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்குவதே மிகப்பெரும் விஷயம். அதனால், இந்த நூலிழை வெற்றியை அதிகம் கொண்டாட வேண்டியதில்லை. காங்கிரஸ் ஒன்றும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுவிடவில்லை."