‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்!’ - நல்லகண்ணு | The anti-people policies are the reason for the BJP's defeat says Nallakannu

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (13/12/2018)

கடைசி தொடர்பு:19:20 (13/12/2018)

‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்!’ - நல்லகண்ணு

'நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, 5 மாநிலத் தேர்தல்களின் முடிவு அமைந்துள்ளது' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

மதுரையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் காளிதாஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர், அப்போது நல்லகண்ணு, " பி.ஜே.பி கூறிய முக்கியமாக  நான்கு திட்டங்களை நிறைவேற்றவில்லை. மாறாக, மக்களுக்கு எதிரான திட்டங்களை மட்டும் செய்தது. மாநில உரிமைகளைப் பறித்தது. இப்படியான காரணங்களால் தோற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, 5 மாநிலத் தேர்தல்களின் முடிவாக அமைந்துள்ளது.

கஜா புயல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைத் தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து, அங்கு மறு வாழ்வுப் பணிகளைச் செய்ய வேண்டும். வெறும் நிவாரணங்கள் மட்டும் அளித்தால் போதாது; பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகம் பாலைவனமாக மாறும். தமிழகத்தில் வறட்சி காரணமாக  விவசாயிகள் நெல்லுக்குப் பதிலாக மக்காச் சோளம் பயிரிட்டுவருகின்றனர். அந்த அளவுக்கு வறட்சி, விவசாயிகளைப் பாதிப்படையச் செய்துவருகிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது மக்களை ஏமாற்றும் வேலை. சிவகாசியில் பட்டாசுத் தொழிலும், தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என்றார்.

முத்தரசன்

 முத்தரசன் கூறுகையில் ,"கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கக் கோரி, டிசம்பர் 18ல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.  5 மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலிலும் பி.ஜே.பி தோல்வியைத் தழுவும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், மத்திய - மாநில அரசுகள் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருகின்றன. ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், தமிழகம் போராட்டக்களமாக மாறும்'' என்று எச்சரித்தார்.