ராமேஸ்வரம் மருத்துவமனையை மேம்படுத்த கோரி வழக்கு - சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ்! | Rameshwaram people demanding improvement in Govt hospital

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (13/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (13/12/2018)

ராமேஸ்வரம் மருத்துவமனையை மேம்படுத்த கோரி வழக்கு - சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ்!

ராமேஸ்வரம் மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல்செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை

ராமநாதபுரம் மாவட்டம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கச் செயலாளர் ஜான் அமல்ராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில்,"ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு, வரலாற்றுச் சிறப்புமிக்கது. இங்கு ஆண்டுதோறும் 50 லட்சம் முதல் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சாலை விபத்தோ, மாரடைப்போ ஏற்பட்டால், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் எவ்வித வசதியும் இல்லாததால் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுகின்றனர்.

ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செல்வதற்கு, குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகிறது. இதனால், உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் உயிரிழக்கின்றனர். ராமேஸ்வரம் மருத்துவமனையில், 19 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 11 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இவர்களில், 7 பேர் மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிகின்றனர். உரிய வசதிகள் இல்லாததால், கடந்த ஒரு வருடத்தில் மாரடைப்பால் மேல்சிகிச்சைக்காக அனுப்பிய 65 பேரில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாம்பன் பாலம்

உயிர் காக்கும் சிகிச்சைக்கான எவ்வித மருத்துவ உபகரணங்களும் இந்த மருத்துவமனையில் இல்லை. மேலும், 62 பேர் மட்டுமே உள்நோயாளியாக சிகிச்சைபெறக்கூடிய நிலையில் உள்ளது.  எனவே, ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு இணையான மருத்துவ சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள், உதவியாளர்களை நியமிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் " என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.