`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன?’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள் | The woman training police has sent a letter to the Human Rights Commission

வெளியிடப்பட்ட நேரம்: 19:24 (13/12/2018)

கடைசி தொடர்பு:19:24 (13/12/2018)

`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன?’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்

காஞ்சிபுரத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் பெண் காவலர்களை அங்குள்ள உயர் அதிகாரிகள் அடிமைபோல் நடத்துவதாகவும் இழிவாகப் பேசுவதாகவும் அதே பள்ளியில் பயிற்சி பெறும் ஒரு பெண் காவலர் மனித உரிமை ஆணையத்துக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்குக் கூடுதல் டி.ஜி.பி விளக்கமளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

காவலர்கள்

அந்தப் பெண் மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த புகாரை நம்மிடம் விவரித்தார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தி. அவர் கூறும்போது, “காஞ்சிபுரம் பயிற்சியில் நிகழ்ந்த கொடுமைகளை பெண் காவலர் ஒருவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘பயிற்சிப் பெண் காவலர்களை அடிமைகள்போல் நடத்துவதால் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு உண்மையைச் சொல்ல முடியாமல் கோழையாக இருக்க நேர்வதாகவும் பயிற்சியின்போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில்கூட முழுமையாக ஓய்வெடுக்க விடாமல் தடுக்கின்றனர். அதனால் ஏற்படும் உடல் சோர்வால் பயிற்சி வகுப்பில் தூங்கி விழுந்தால் தண்டனை அளிப்பதுடன், அதிகாரியின் அறைக்கு அழைக்கப்பட்டு இழிச் சொற்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது.  

இது தொடர்பாகப் புகார் அளித்தால் கடிதத்தில் உள்ள கையெழுத்து மூலம் யார் எனக் கண்டறிந்து அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், புகார் பெட்டியின் பக்கத்தில் ஒரு காவலர் நியமிக்கப்பட்டு யார் புகார் அளிக்கவந்தாலும் அவர்களைப் புகைப்படமெடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது. தண்டனை கொடுப்பதிலும் பயிற்சி அதிகாரிகளுக்குத் தெரிந்த காவலர்களின் மகள், உறவினராக இருந்தால் பெரிய தவறு செய்தாலும் தண்டனை எதுவுமில்லை. ஆனால், ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் காவலர்கள் சிறிய தவறு செய்தாலும் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. ‘தண்டனை’ என்பதை ‘பயிற்சி’ என்ற போர்வையில் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைப்பது, உடல் வலி, சோர்வு, மயக்கம் போன்ற உண்மைகளைச் சொன்னாலும் தண்டனையைக் குறைப்பதில்லை. வெறும் ஏட்டளவில் மனித உரிமை பற்றி சொல்லிக் கொடுக்கும் அதிகாரிகள் அதைக் கொஞ்சம்கூட நடைமுறைப்படுத்துவதில்லை’ என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்ததையொட்டி அதை விசாரித்த நீதிபதி, ``சம்பந்தப்பட்ட எஸ்.பி மற்றும் பயிற்சித் துறை கூடுதல் டி.ஜி.பி ஆகியோர் ஐந்து வாரக் காலத்துக்குள் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். எனது அனுபவத்தில் காவலர் பயிற்சி பள்ளியில் மட்டுமல்ல அது முடிந்து பணிக்குச் செல்லும் காவலர்களுக்கும் சில கொடுமைகள் நடக்கின்றன. ஒரு வழக்கில் காவல் துறை விதிகளைச் சுட்டிக்காட்டி கீழ்நிலை காவலர்களுக்கு வார விடுப்பு அளிக்கப் படுவதாகவும், இல்லையெனில் அவர்களுக்கு வாரம் ரூ.200 அளிக்கப் படுவதாகவும் டி.ஜி.பி எழுத்துபூர்வமாகக் கூறியிருந்தார். ஆனால், உண்மை என்னவெனில் அது பின்பற்றப்படுவதில்லை. மாறாக விடுப்பும் கொடுக்கப்படுவதில்லை, பணமும் அளிக்கப்படுவதில்லை எனப் பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். இந்த உரிமையைக் கேட்டால் தான் பழிவாங்கப்படுவோமோ என்கிற அச்சமே அவர்களிடத்தில் உள்ளது. இதனால் காவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. தமிழக காவல்துறை மன அழுத்தத்தைப் போக்க ரூபாய் 10 கோடி செலவில் திட்டம் கொண்டு வந்ததாகச் சொல்லிக்கொண்டாலும், மேலே கூறப்பட்ட மன அழுத்தங்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியும். மனித உரிமைகளை அறிந்து காவல்துறைக்கு எதிராக விழிப்பு உணர்வு பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பேசி முடித்தார்.