வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (13/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (13/12/2018)

613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு! #VikatanInfographics

மருத்துவப் படிப்புகளில் சேர `நீட்’ தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுவது அவசியம் என மத்திய அரசு 2016-ம் ஆண்டு அறிவித்தது. `நீட்’ தேர்வு சமூக நீதிக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது எனத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டின. தமிழக அரசு `நீட்' தேர்விலிருந்து விலக்கு கேட்டபோது, அது மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. 

பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற பிறகும், `நீட்' தேர்வில் தேர்ச்சியடைவதற்கான சூழல் இல்லாததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். மத்திய அரசின் `நீட்' தேர்வு முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் வரை சென்றும் அனிதாவுக்கு நீதி கிடைக்கவில்லை. அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

கடந்த ஆண்டு 'நீட்' தேர்வு எழுதுவதற்காகப் பல்வேறு மாணவர்கள் ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், 'நீட்' தேர்வு எழுதுவதற்கு முன் செய்யப்பட்ட சோதனைகளும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏறத்தாழ 2,400 இடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படுகின்றன. 'நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு, தற்போதைய கல்வியாண்டில் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை முதலான கேள்விகளை முன்வைத்து ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் மருத்துவக் கல்வி ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தார். அவற்றுக்கான பதில்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

மருத்துவப் படிப்புகளில் 23% சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களும், 0.1% அரசுப்பள்ளி மாணவர்களும் படிப்பதுதான் 'நீட்' தேர்வு தமிழ்நாட்டில் நிலவிவந்த சமூக நீதிக் கோட்பாட்டுக்கு அளித்திருக்கும் பரிசு! 

நீட் தேர்வு