`பா.ஜ.க போராட்டத்தில் ஐயப்ப பக்தர் தீக்குளிப்பு’ - கேரளத்தில் நாளை பந்த்! | Sabarimala temple Issue BJP calls for State Bandh

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (13/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (13/12/2018)

`பா.ஜ.க போராட்டத்தில் ஐயப்ப பக்தர் தீக்குளிப்பு’ - கேரளத்தில் நாளை பந்த்!

திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு பா.ஜ.க போராட்டம் நடத்தும் பந்தல் எதிரே, ஐயப்ப பக்தர் ஒருவர்  தீக்குளித்து இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கேரளத்தில் பா.ஜ.க பந்த் அறிவித்துள்ளது.

வேணுகோபாலன்


சபரிமலை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து பா.ஜ.க பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது. அதன் ஒருபகுதியாக, கடந்த 13 நாள்களுக்கு முன்பு பா.ஜ.க பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஏ.என்.ராதாகிருஷ்ணன், திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அவரை காவல் துறையினர் கைதுசெய்து மருத்துவமனையில் சேர்த்தனர். அதைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சி.கே.பத்மநாபன் தலைமையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்துவருகிறது. உண்ணாவிரத பந்தல் முன்பு ரோட்டோரம், நேற்று நள்ளிரவு இரண்டு மணியளவில் முட்டடை அஞ்சுமுக்கு பகுதியைச் சேர்ந்த வேணுகோபாலன் நாயர் (49) என்பவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். தீவைத்த வேகத்தில் ஐயப்ப சரணகோஷம் முழங்கியபடி பந்தல் அருகே ஓடிவந்தார்.

பந்த்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் பாதுகாபுக்கு நின்ற காவலர்கள் அங்கு குடிக்க வைத்திருந்த தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர். 70 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயம் ஏற்பட்ட வேணுகோபாலன் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, நாளை கேரள மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பந்த் காரணமாக இடையூறு ஏற்படாது எனவும் பா.ஜ.க அறிவித்துள்ளது.