'முருகமலை அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம்?'’ - விவசாயிகள் அச்சம் | Murugamalai Farmers Fear leopard attack

வெளியிடப்பட்ட நேரம்: 21:57 (13/12/2018)

கடைசி தொடர்பு:21:57 (13/12/2018)

'முருகமலை அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம்?'’ - விவசாயிகள் அச்சம்

பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில், சிறுத்தை நடமாடுவதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியில் வசித்துவரும் மூக்கையா என்பவருக்கு, சொந்தமாக முருகமலை அடிவாரப் பகுதியில் மாந்தோப்பு உள்ளது. அந்தத் தோப்பில் பெருமாள் என்பவர் காவலுக்கு குடியிருந்துவருகிறார். அவர் ஆசையாக வளர்த்த மூன்று நாய்களில் ஒன்று கடந்த வாரம் காணாமல் போயுள்ளது. தோட்டத்தில் எங்கு தேடியும் கிடைக்காததால், மன வேதனையில் இருந்தார் . இந்நிலையில், இன்று காலை தோட்டத்திலிருந்து சிறிது தொலைவில் அந்த நாய் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளார் . நாயின் வயிற்றுப்பகுதியை ஏதோ கொடிய விலங்கு கடித்துள்ளது போல இருந்ததால், சிறுத்தை வேட்டையால் நாய் இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக அச்சமடைந்த பெருமாள், இத்தகவலை அருகில் இருக்கும் விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தினார்.

நாய்

முருகமலை அடிவாரத்தில், தற்போது சிறுத்தைகள் அதிகம் நடமாடுவதாகவும், அவற்றைக் கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் அல்லது சோலார் மின் வேலி அமைக்க அனுமதி கொடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தேவதானப்பட்டி வனச்சரகர் சுரேஷ்குமார் கூறும்போது, ”விவசாயப் பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை. அப்படி இருந்தால், எங்களுக்கு உடனே தகவல் கொடுக்கலாம். இறந்த நாய், சிறுத்தை தாக்கி இறக்கவில்லை” என்றார்.