`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக செந்தில் பாலாஜியின் மாஸ்டர் பிளான்! | Senthil balaji Master plan against thambidurai

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (13/12/2018)

கடைசி தொடர்பு:21:30 (13/12/2018)

`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக செந்தில் பாலாஜியின் மாஸ்டர் பிளான்!

 செந்தில்பாலாஜி கட்சி மாறுவதற்குள், தான் தி.மு.க-வுக்குப் போகக் காரணமாக இருக்கும் கரூர் சின்னசாமியிடம், ``நீங்க கரூர் எம்.பி தொகுதி சீட்டை வாங்குங்க. என் செலவுல உங்களை ஜெயிக்க வைக்கிறேன். தம்பிதுரையை இந்தமுறை மண்ணைக் கவ்வ வைப்போம்!" என்று 'ஜென்டில்மென்ட் அக்ரிமென்ட்' போட்டுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

 செந்தில்பாலாஜி


அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட பிணக்கு காரணமாக தி.மு.க-வில் நாளை தன் ஆதரவாளர்களுடன் தாவ இருக்கிறார். அவரை கட்சி மாறவிடாமல் சமாதானப்படுத்துவதற்காகக் கட்சியின் அமைப்புச் செயலாளர் பழனியப்பன், பொருளாளர் தஞ்சை ரெங்கசாமி உள்ளிட்ட புள்ளிகளை டி.டி.வி.தினகரன் கரூர் அனுப்பினார். அவர்களைச் சந்திக்காமல் டிமிக்கி கொடுத்தார் செந்தில் பாலாஜி. நாளை தி.மு.க-வில் ஸ்டாலின் முன்னிலையில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. ஆனால், செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்குப் போனாலும், அ.ம.மு.க-வில் உள்ள கரூர் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சி மாற விருப்பப்படவில்லை. அவர்களின் மனதைக் கரைத்து இன்று இரவுக்குள் சென்னைக்குச் செல்ல தான் ஏற்பாடு செய்துள்ள வாகனத்தில் ஏற்றி இணைப்பு விழாவில் கலந்துகொள்ள அழைத்து வர தனி டீமை போட்டுள்ளாராம். இந்நிலையில், தன்னை தி.மு.க-வுக்கு அழைத்துப்போகும் முன்னாள் அமைச்சரும் தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளருமான கரூர் சின்னசாமியிடம் செந்தில் பாலாஜி 'ஜென்டில்மேன் அக்ரிமென்ட்' போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.


 கரூர் சின்னசாமி(முன்னாள் அமைச்சர்)

``அது என்ன ஜென்டில்மேன் அக்ரிமென்ட்!" என்று விசாரித்தோம். "தன்னை தி.மு.க-வுக்குள் அழைத்துப்போகும் கரூர் சின்னசாமிக்குப் பரிசாக வரும் எம்.பி தேர்தலில் அவரை கரூர் தொகுதியில் சீட் கேட்டு வாங்கச் சொல்லி இருக்கிறார். அப்படி சீட் வாங்கியவுடன் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் தன் காசை இறக்கி அடித்து, சின்னசாமியை வெற்றி பெற வைப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். வரும் தேர்தலில் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரையை மண்ணைக் கவ்வ வைப்பதாகவும் சபதம் போட்டிருக்கிறார். இதுதான் அந்த ஜென்டில்மேன் அக்ரிமென்ட்.

தம்பிதுரை

அதோடு, 2011- 2015 வரை அ.தி.மு.க-வில் இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். அப்போது எம்.பி-யாக இருந்த தம்பிதுரையை அவர் மதிக்கவில்லை. இதனால், தக்க தருணம் பார்த்திருந்த தம்பிதுரை, 2015-ல் செந்தில் பாலாஜியின் பதவியை ஜெயலலிதா பறித்துவுடன், அவரை கவுக்க இப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் தொகுதியில் சீட் வாங்கிக் கொடுத்ததோடு, ஜெயிக்கவும் வைத்தார். கூடவே மாவட்டச் செயலாளராகவும் ஆனார்.

அதற்குப் பழிவாங்கவே இப்போது வரும் எம்.பி தேர்தலில் தம்பிதுரையை மண்ணைக் கவ்வ வைத்து, கரூர் சின்னசாமியை ஜெயிக்க வைப்பதாக சபதம் போட்டுள்ளார் செந்தில்பாலாஜி. அதேநேரத்தில் 2000-ல் தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்தபோது அ.தி.மு.க-வில் முக்கியப் புள்ளியாக இருந்தார் கரூர் சின்னசாமி. ஆனால், செந்தில்பாலாஜியின் நெருக்கடி தாங்க முடியாமல்தான் தி.மு.க-வுக்குப் போனார் சின்னசாமி. ஆனால், தன்னை காலை வாரிய அதே செந்தில்பாலாஜிக்கு அரசியல் வாழ்க்கை கொடுக்க இப்போது தி.மு.க-வுக்கு அழைத்துப்போக இருக்கிறார் அதே கரூர் சின்னசாமி. சின்னசாமியின் இந்த முயற்சியின் பின்னே எதுவும் அரசியல் பழிவாங்கல் இருக்கான்னு தெரியலை" என்றார்கள்.