‘காசு கொடு செல்போன் தரேன்!’ -கைதியிடம் டீலிங் பேசிய சிறைக்காவலர் | cop Deals with prisoner

வெளியிடப்பட்ட நேரம்: 01:20 (14/12/2018)

கடைசி தொடர்பு:01:20 (14/12/2018)

‘காசு கொடு செல்போன் தரேன்!’ -கைதியிடம் டீலிங் பேசிய சிறைக்காவலர்

வேலூர் மத்திய சிறையில், கைதியிடம் பணம் பெற்றுக்கொண்டு செல்போன் கொடுத்த சிறைக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர், கார்வீன் மோசஸ் (45). கள்ளச்சாராய வியாபாரியான இவர், சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். கைதி கார்வீன் மோசஸுக்கும், சிறையில் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றிவரும் கணபதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ‘தன்னுடைய குடும்பத்தினரிடம் பேச வேண்டும்’ என்று கைதி தெரிவித்துள்ளார். ‘காசு கொடுத்தால் என்னுடைய செல்போனிலேயே உன் குடும்பத்தாரிடம் நீ பேசலாம்’ என்று கூறியுள்ளார் சிறைக்காவலர் கணபதி. இதற்கு ஒப்புக்கொண்ட கைதி, சிறைக்காவலரின் செல்போனை வாங்கி தன்னுடைய குடும்பத்தினரிடம் அடிக்கடி பேசிவந்துள்ளார்.

அவ்வப்போது, கார்வீன் மோசஸைப் பார்க்க அவரின் குடும்பத்தினர் சிறைக்கு வரும்போது, சிறைக்காவலர் கணபதியிடம் பணம் கொடுத்துள்ளனர். இதையறிந்த சிறைத்துறை அதிகாரிகள், சிறைக்காவலர் கணபதியை ரகசியமாகக் கண்காணித்தனர். கைதியிடம் சிறைக்காவலர் செல்போனைக் கொடுத்தபோது, அதிகாரிகள் பிடித்தனர். செல்போனை ஆய்வுசெய்ததில், சிறையில் உள்ள பல கைதிகள் வெளியில் உள்ளவர்களிடம் பேசியிருப்பது தெரியவந்தது. செல்போன்களை சேகரித்த போலீஸார், கைதிகளிடம் பேசியவர்கள் யார் யார்? என்பதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிறைக்காவலர் கணபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.