`செந்தில்பாலாஜியை கட்சி மாறவிடாமல் தடுப்பேன்' - அ.தி.மு.க-விலிருந்து ஒரு குரல்! | "I can not stop Senthil balaji from changing party" says aiadmk district secretary

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (13/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (13/12/2018)

`செந்தில்பாலாஜியை கட்சி மாறவிடாமல் தடுப்பேன்' - அ.தி.மு.க-விலிருந்து ஒரு குரல்!

"நானும் சென்னையில்தான் உள்ளேன். நான்தான் 2000-ல் தி.மு.க-வில் இருந்த செந்தில் பாலாஜியை அ.தி.மு.க-வில் இணைத்தேன். அவரை தி.மு.க-வுக்கு போகக் கூடாது என்று தடுக்க பலமுறை அவரைத் தொடர்புகொண்டேன். என் போனை எடுக்கவில்லை. இன்று இரவுக்குள் அவரை கட்சி மாறவிடாமல் தடுப்பேன்" என்று அதிரடியாக நம்மிடம் தெரிவித்தார் அ.தி.மு.க-வின் முன்னாள் மாவட்டச் செயலாளரான ஷாகுல் ஹமீது. 


 செந்தில்பாலாஜி

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, நாளை மதியம் 2000 ஆதரவாளர்களோடு சென்னையில் தி.மு.க-வில் இணைகிறார். அவரை தி.மு.க-வுக்கு செல்லவிடாமல் தடுக்க முன்னாள் அமைச்சர் பழனியப்பன், கட்சியின் பொருளாளர் ரெங்கசாமி உள்ளிட்ட புள்ளிகளை தினகரன் அனுப்பியும் பலனில்லை. செந்தில் பாலாஜி தி.மு.க -வின் மாநில விவசாய அணி செயலாளர் கரூர் சின்னசாமி தலைமையில் தி.முந்வில் இணைவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இன்று,அவரது ஆதரவாளர்களை சென்னை அழைத்துக்கொள்ள கரூரில் 50 வேன்கள் மற்றும் 100 கார்களைத் தயார் செய்திருக்கிறார், செந்தில்பாலாஜி. இந்நிலையில்தான், சென்னையில் முகாமிட்டுள்ள செந்தில் பாலாஜியை 2000-ம் ஆண்டு தி.மு.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்கு அழைத்துக்கொண்ட அப்போதைய மாவட்டச் செயலாளர் ஷாகுல் ஹமீது, "இன்று இரவுக்குள் செந்தில் பாலாஜியிடம் பேசி, அவரை தி.மு.க-வுக்கு செல்லவிடாமல் தடுப்பேன்" என்று நம்மிடம் சபதமாகத் தெரிவித்தார். 


 ஷாகுல் ஹமீது(அ.தி.மு.க முன்னாள் கரூர் மாவட்டச் செயலாளர்)

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் கரூர் மாவட்டச் செயலாளர் ஷாகுல் ஹமீது, "1995ல் தி.மு.க-வில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் செந்தில்பாலாஜி. 2000 வரை தி.மு.க-வில்தான் இருந்தார். 1996-ம் ஆண்டு, ஒரே ஒருமுறை மண்மங்கலம் வார்டில் நின்று ஒன்றிய கவுன்சிலர்  ஆக மட்டுமே முடிந்தது. தி.மு.க-வில் அதன்பிறகு அவரால் ஜொலிக்க முடியலை.   2000-ல் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக நான் இருந்தேன். தி.மு.க சார்பில் தொடர்ந்து இரண்டு முறை கரூர் ஒன்றியக்குழுத் தலைவராக இருந்த விஜயலட்சுமி ராமசாமி,ஒன்றியக்குழு துணைத் தலைவர் எம்.சி.கந்தசாமி, அப்போதைய ஒன்றிய கவுன்சிலர் செந்தில்பாலாஜியையும் சேர்த்துக் கொண்டு, 300 பேரோடு என் மூலமாக அ.தி.மு.க-வில் இணைந்தார்.  

2000-ல் கரூர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட மாணவரணி செயலாளர், 2004-ல் கரூர் அ.தி.மு.க மாவட்ட மாணவரணி செயலாளர், 2007   மார்ச்சில் மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளர், அடுத்த 10 நாள்களில் மாவட்டச் செயலாளர்னு அரசியலில் உயரம் தொட்டார். அப்புறம் 2006, 2011 இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் கரூர் தொகுதியில் நின்று ஜெயித்தார். 2011-ம் ஆண்டு ஜெயலலிதாவால் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கப்பட்டார்.

இப்படி அ.தி.மு.க-வில் இருந்துதான் இவ்வளவு சிறிய வயதில் அரசியலின் உச்சம் தொட்டார். தி.மு.க-வில் இருந்தபோது பெரிதாக சோபிக்கவில்லை. செந்தில் பாலாஜி திறமைசாலி. சோறு தண்ணி இல்லாம கட்சி வளர்க்க கடுமையாக உழைக்கக்கூடியவர். அப்படிப்பட்ட அவர், தன்னை வளர்த்த அ.தி.மு.க-வுக்கு போகணுமேயொழிய, தி.மு.க-வுக்கு போகக்கூடாது. அவரைத் தடுக்க பலமுறை  அழைத்தேன். எனது காலை அவர் அட்டென்ட் செய்யவில்லை. அதனால்,நேராகப் பார்த்து பேசிவிடுவதுனு சென்னை வந்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால், இன்று இரவுக்குள் அவரிடம் பேசி, அவரை தி.மு.க-வுக்கு போகவிடாமல் தடுப்பேன்" என்று சூளுரைத்தார்.