`வேலூர் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள்!’ - அசத்தும் ரஜினி மக்கள் மன்றம் | One and a half lakh members are joined in Rajini makkal mandram from Vellore district

வெளியிடப்பட்ட நேரம்: 02:39 (14/12/2018)

கடைசி தொடர்பு:07:10 (14/12/2018)

`வேலூர் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள்!’ - அசத்தும் ரஜினி மக்கள் மன்றம்

வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு சவால்விடும் வகையில் ரஜினி மக்கள் மன்றத்தில் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 ரஜினி

அரசியல் பிரவேசம் எடுத்த நடிகர் ரஜினிகாந்த், இன்னும் கட்சி அறிவிப்பு குறித்த தகவலை வெளியிடவில்லை. மக்கள் மன்றத்தின் கட்டமைப்புகளை மாற்றிப் பலப்படுத்தி வருகிறார். தன்னுடைய பிறந்தநாளான கடந்த 12-ம் தேதி முழுநேர அரசியலுக்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனாலும், ரஜினியின் இந்த பிறந்தநாளை, மக்கள் மன்றத்தினர் அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

வேலூர் மாவட்ட மக்கள் மன்றத்தினர், சத்ய நாராயண ராவ் தலைமையில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மகா ருத்ர யாகம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி தலைமையில் பால்குடம் எடுத்து அன்னதானம் வழங்கி தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். பிறந்த நாளில், கட்சி அறிவிப்பை அறிவிக்கவிட்டாலும் மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பன்மடங்கு அதிகரித்துள்ளார்  ரஜினி.

ரஜினி

வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள், ரஜினி மக்கள் மன்றத்தில் இருக்கிறார்கள். முதன் முதலில் வேலூர் மாவட்டத்துக்குத்தான் மன்ற நிர்வாகிகளை ரஜினி நியமித்தார். இம்மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையிலான பொறுப்பாளர்கள், ஏற்கெனவே அரசியல் கட்சிகளில் உள்ள நிர்வாகிகளை மிஞ்சும் அளவுக்குச் செயல்பட்டனர். கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்பது என்பது சாதாரண விஷயமில்லை.

இதுபற்றி மன்ற நிர்வாகிகள் கூறுகையில், ``வேலூர் மாவட்டத்தில் 3450 பூத் அமைத்து உறுப்பினர்களைச் சேர்த்து வருகிறோம். மாவட்டம், மாநகரம், ஒன்றியம், நகரத்துக்குப் பொறுப்பாளர்களை நியமித்ததோடு, இளைஞரணி, மகளிரணி, விவசாய அணி, வழக்கறிஞரணிக்கு தனித்தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளோம். இதன் எண்ணிக்கையை மேலும் பலமடங்கு அதிகரிப்போம்’’ என்றனர்.