புதுக்கோட்டையில் 64,098 வீடுகளுக்கு ரூ.32 கோடி நிவாரணம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்! | Minister Vijaypasakar had to pay Rs 32 crore relief for 64,098 houses in Pudukottai district

வெளியிடப்பட்ட நேரம்: 03:25 (14/12/2018)

கடைசி தொடர்பு:07:31 (14/12/2018)

புதுக்கோட்டையில் 64,098 வீடுகளுக்கு ரூ.32 கோடி நிவாரணம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 2.17 லட்சம் வீடுகளில் 64,098 வீடுகளுக்கு ரூ.32 கோடி நிவாரணத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

விஜயபாஸ்கர்

கஜா புயல் மீட்புப் பணிகள் மற்றும் முன்னேற்றம் குறித்த அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ``புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட தீவிர மீட்புப் பணிகள் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகு விரைவாகத் திரும்பி உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் 27 வகையான நிவாரணப் பொருள்கள் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 2.17 லட்சம் வீடுகளில் 64,098 வீடுகளுக்கு ரூ.32 கோடி நிவாரணத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

 

மீதம் உள்ளவர்களுக்குத் தொடர்ந்து நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கால்நடைகளின் இறப்பு முழுமையாகக் கணக்கிடப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். புயலால் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்துவிட்டன. எனவே, புயலால் விழுந்த மரங்களுக்கு இணையாக 2 மடங்கு மரங்கள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்" என்றார்.

மாவட்டத்தில் 35 சதவிகித வீடுகளுக்கு ரூ.32 கோடி நிவாரணத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் ஏற்றப்பட்டு விட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்கூட முறையாகச் சென்றடையவில்லை என்பதுதான் கள நிலவரம். புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த மக்கள் ``எங்களுக்கு எந்த நிவாரணப் பொருள்களும் வரலை. நிவாரணத்தொகையும் கிடைக்கலை'' என்று கண்ணீர் வடிக்கின்றனர்.