ரூ.50,000 கொடுத்தால்தான் வரைபட அனுமதி! லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கிய ஒன்றிய ஆணையர் | Two persons, including the Union Commissioner arrested for get bribe

வெளியிடப்பட்ட நேரம்: 03:50 (14/12/2018)

கடைசி தொடர்பு:07:39 (14/12/2018)

ரூ.50,000 கொடுத்தால்தான் வரைபட அனுமதி! லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கிய ஒன்றிய ஆணையர்

வீடு கட்ட வரைபட  அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய ஆணையாளரும் அவருக்குத் துணையாக இருந்த ஊராட்சி செயலாளரும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கினர். 

லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் மற்றும் ஒன்றிய ஆணையர்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் காந்திநகர் பகுதியில் 1404 சதுர அடியில் வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு வங்கியில் கடன் வாங்குவதற்காகக் கட்டட வரைபட அனுமதி வழங்க திருப்பாலைக்குடி  ஊராட்சி செயலாளர் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி) ஆகியோரை அனுகியுள்ளார். அவர்கள் இருவரும் ஒரு சதுர அடிக்கு நூறு ரூபாய் வீதம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். அவ்வளவு தொகை தன்னிடம் இல்லை எனக் கூறிய சண்முகம் ரூ.20,000 தருவதாக கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த அவர்கள் ஒரு வழியாக சண்முகத்திடம் ரூ 50,000 கொடுத்தால்தான் கட்டட வரை பட அனுமதி கொடுக்க முடியும் எனக் கறாராக கூறியுள்ளனர். 
 
இதனால் வெறுத்துப் போன சண்முகமும் அவருடைய உறவினர் ராமமூர்த்தியும் இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் கூறி உள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனைப்படி ரசாயன பொடி  தடவிய ரூபாயை சண்முகத்திடம் கொடுத்து ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர். இன்று மாலை ஆர்.எஸ்.மங்களம் ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்ற  சண்முகமும் ராமமூர்த்தியும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பச்சமாலிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாகக் கொடுத்துள்ளனர்.  

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ஜானகி, வானதி ஆகியோர்  லஞ்சப் பணத்துடன் பச்சமாலையும், அவருக்குத் துணையாக இருந்த திருப்பாலைக்குடி ஊராட்சி செயலாளர் மாணிக்கத்தையும் பிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த பணத்தினையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் லஞ்சம் பெற்ற இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.