யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டதா? - வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு உத்தரவிட்ட நீதிமன்றம் | madurai high court talks about elephant issues

வெளியிடப்பட்ட நேரம்: 05:02 (14/12/2018)

கடைசி தொடர்பு:08:11 (14/12/2018)

யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டதா? - வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு உத்தரவிட்ட நீதிமன்றம்

யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது, மின்சாரம் தாக்கி உயிரிழப்பது குறித்து தேசிய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

யானைகள்

மேற்குத்தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் அழகிய பகுதிகளில் ஒன்று மேகமலை. மேகங்கள் தவழ்ந்து செல்லும் மலைகளில் பல அரிய உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. சுற்றுலாத்தலமாக இருக்கும் மேகமலையில் கடந்த 6 மாதங்களில் 6-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பலியாகியிருப்பது வன விலங்கு ஆர்வலர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாழ்வாகச் செல்லும் உயர் மின் அழுத்தக் கம்பியால்தான் யானைகள் உயிரிழந்தன என வனத்துறை தகவல் தெரிவித்துவருகின்றனர்.

யானைகள் 

இந்த நிலையில், எஸ்.மனோஜ் இமானுவேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``மேகமலை வனவிலங்கு சரணாலயம் 630 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்குள்ள யானைகள் இடம் பெயரும்போது மேகமலையில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழக்கின்றன. அண்மைக் காலத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பது அதிகமாக உள்ளது. ஒரே பகுதியில் 6 மாதத்தில் 8 யானைகள் இறந்துள்ளன. அது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது. எனவே, யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது குறித்து தேசிய வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் சி.பி.ஐ இணைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட வனத்துறை மற்றும் மின்சாரத் துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் ஆதிகேசவலு அமர்வு தேசிய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் சி.பி.ஐ இருவரையும் எதிர் மனுதாராகச் சேர்த்தும், இது குறித்து சி.பி.ஐ, தேசிய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு, தமிழக தலைமை வன பாதுகாவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.