பெய்தா புயலில் இருந்து மரங்களைக் காப்பது எப்படி? விவசாயிகளுக்கு அறிவுறுத்திய மாவட்ட நிர்வாகம் | Action takes to protect coconut trees from the storm of Peyta

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (14/12/2018)

கடைசி தொடர்பு:08:42 (14/12/2018)

பெய்தா புயலில் இருந்து மரங்களைக் காப்பது எப்படி? விவசாயிகளுக்கு அறிவுறுத்திய மாவட்ட நிர்வாகம்

பெய்தா புயலின் தாக்குதலில் இருந்து தென்னை, மா மரங்கள் மற்றும் நெற் பயிர்களை காக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெய்தா புயல் பாதிப்பு தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கடந்த மாதம் வீசிய கஜா புயலில் சிக்கிய டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள், மா, வாழை, முந்திரி மரங்கள் அடியோடு நாசமாகிப் போயின. இதனால் இவற்றை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அடுத்த வேளை உணவுக்குக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தக் கோரத் தாக்குதலில் இருந்து இன்னும் முழுமையாக மீள முடியாத நிலையில் விவசாயிகள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகியுள்ளது. 'பெய்தா' எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயல் அடுத்த இரு தினங்களில் வடக்கு கடற்கரையோர பகுதிகளில் தாக்குதலை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலிலிருந்து தென்னை, மா, பலா மரங்களையும், நெற் பயிர்களையும் காப்பாற்றும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளது.

பெய்தா புயல் முன்னெச்சரிக்கை

இதன்படி 7 முதல் 40 ஆண்டுகளுக்கு உட்பட்ட அதிக மகசூல் தரும் தென்னை மரங்களைக் கண்டறிந்து அதில் உள்ள தேங்காய், இளநீர் மற்றும் அதிக எடை கொண்ட தென்னை மட்டைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். இதன் மூலம் அதிக தலைபாரத்தைக் கொண்ட இந்த மரங்களில் தலைபாரம் குறைந்து புயலைத் தாங்கும் நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், தென்னை மரங்களுக்கு 4 நாள்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும். இதன் மூலம் வேர்கள் இறுகி காற்றின் வேகத்தினால் சாயும் நிலை ஏற்படாமல் தடுக்க முடியும். புயல் காற்று வீசும் காலங்களில் காற்று எளிதாக மரங்களின் ஊடே செல்லும் வகையில் அடர்த்தியான இலைகள், பக்கவாட்டு கிளைகளை நீக்கி மரம் வேரோடு சாய்வதைத் தடுக்கலாம்.

இலை, கிளை நீக்கப்பட்ட பகுதிகளில் ஒரு லிட்டர் நீரில் 300 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு கலந்த கலவையை கலந்து பூச வேண்டும். வாழைத் தோட்டங்களை சுற்றி நீர் தேங்காதவாறு வாய்க்கால்கள் அமைப்பதன் மூலம் வாழை மர இழப்புகளைத் தடுக்கலாம். நெல், பயறு வகைகள், சிறு தானியங்கள், பருத்தி, கரும்பு, கடலை போன்ற பயிர்களுக்கு வயல்களின் தண்ணீரை வடிந்து செல்லும் வகையில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பல்லாண்டு கால தென்னை மற்றும் பணப் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் முன்வருமாறு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்துமாரி அறிவித்துள்ளார்.