வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (14/12/2018)

கடைசி தொடர்பு:10:25 (14/12/2018)

`நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்!’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்

5 மாநில தேர்தலில் பா.ஜ.க தோல்வி காரணம் குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கருத்து தெரிவித்திருக்கிறார்.


அர்ஜுன் சம்பத்

புதுச்சேரியில் கோயில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கும் புதுச்சேரி அரசைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் கருவடிக்குப்பம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்து மக்கள் கட்சி

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத், ``ராமர் கோவில் கட்டுவது, பசு வதைத் தடுப்புச் சட்டம், நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட இந்து மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. அதன் காரணமாகத்தான் ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க தோல்வியடைந்திருக்கிறது. அதனால் இனியாவது பிரதமர் மோடி இந்துத்துவா கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்.

பாஜக

இது தற்காலிகமான தோல்விதான். வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று மோடி பிரதமராக பதவியேற்பார். `2.0' படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த்தின் செல்வாக்கு உலக அளவில் அதிகரித்திருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது நல்ல மனநிலையில் இருக்கிறார். அரசியல் கட்சிக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்.

போராட்டம்

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அவர் போட்டியிட்டு தமிழகத்தின் முதலமைச்சராவார். மகா படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி காவி உடை அணிந்து புகைபிடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்க இருக்கிறோம். புதுச்சேரி மாநில மக்களுக்கு நல்லது செய்து வரும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களுக்கு முதலமைச்சர் நாராயணசாமி தடையாக இருக்கக்கூடாது. மக்கள் ஆதரவு எப்போதும் கிரண் பேடி அவர்களுக்குத்தான்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க