வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (14/12/2018)

கடைசி தொடர்பு:12:30 (14/12/2018)

`சைக்கிளை யார் கொடுப்பது!’ - வேலூர் அரசுப் பள்ளியில் அ.தி.மு.க - தி.மு.க மோதல்

வேலூர் அருகே அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க - தி.மு.கவினர் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மோதல்

வேலூர் அடுத்த அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஊசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் `ப்ளஸ் ஒன்’ மற்றும் `ப்ளஸ் டூ’ படிக்கும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொகுதி தி.மு.க எல்.எல்.ஏ. நந்தகுமார் கலந்துகொண்டு சைக்கிள்களை வழங்கினார். அப்போது, அங்கு திடீரென வந்த வேலூர் ஒன்றிய அ.தி.மு.க அவைத் தலைவர் ரங்கநாதன், எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் சேட்டு ஆகியோர் ஆசிரியர்களிடம்  ``ஆளும் கட்சியான அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு விழா குறித்த தகவலைத் தெரிவிக்காதது ஏன்? நீங்கள் சொல்லியிருந்தால் அமைச்சர் வீரமணியை அழைத்து வந்து சைக்கிள்களை கொடுத்திருப்போமே...’’ என்று மிரட்டினர்.

 மோதல்

அங்கிருந்த தி.மு.க-வினர் `தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் சைக்கிள்களை கொடுக்கிறோம்’ என்றுக்கூறி அ.தி.மு.கவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. அ.தி.மு.க ஒன்றிய அவைத்தலைவர் ரங்கநாதனின் சட்டையைப் பிடித்துக் கிழித்த தி.மு.க-வினர் அவரை கீழே தள்ளி சரமாரியாக அடித்து உதைத்தனர். பதிலுக்கு அ.தி.மு.க-வினரும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. இதுபற்றி இருக்கட்சியினரும் அரியூர் போலீஸில் பரஸ்பர புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளிக்குள், அதுவும் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.தி.மு.க-தி.மு.கவினர் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.