வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (14/12/2018)

கடைசி தொடர்பு:16:35 (14/12/2018)

`அ.தி.மு.க-வைவிட சிறப்பாக இருப்பீர்கள்!'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி 

ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்தார். அப்போது, `அ.தி.மு.க.வைவிட இங்கு சிறப்பாக இருப்பீர்கள்' என்று செந்தில் பாலாஜிக்கு வாக்குறுதி அளித்துள்ளார் மு.க.ஸ்டாலின். 

டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவரை தி.மு.க. கரூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கரூர் மாவட்ட தி.மு.க. முன்னணி நிர்வாகிகளும் வரவேற்று ஸ்டாலினிடம் அழைத்துச் சென்றனர். அப்போது அந்த இடம் அமைதியாகவே காணப்பட்டது. தி.மு.க-வில் சிலரின் முகத்தில் சிரிப்பு இல்லை. செந்தில் பாலாஜியை புன்சிரிப்புடன் வரவேற்றார் ஸ்டாலின்.

வாங்கி வந்த பூங்கொத்தை ஸ்டாலினிடம் கொடுத்தார் செந்தில் பாலாஜி. அதைப் பெற்றுக்கொண்ட அவருக்கு சால்வை அணிவித்தார் செந்தில் பாலாஜி.  அதன்பிறகு செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் சால்வை அணிவித்தார். இருவரும் கைகளைக் கோத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அதன்பிறகு தி.மு.க. உறுப்பினர் படிவத்தை செந்தில் பாலாஜி பூர்த்தி செய்துகொடுத்தார். பின்னர் ஸ்டாலின் அருகில் நின்று செந்தில் பாலாஜி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் போட்டோ எடுத்துக்கொண்டனர். 

 ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜியை தி.மு.க.வுக்கு அழைத்து வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளராக கே.என் நேரு நியமிக்கப்பட்டார். தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று கே.என்.நேரு உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். அப்போது கடந்த தேர்தலின்போது போட்டியிட்ட கரூர் கே.சி.பழனிசாமியை  நிறுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது கே.சி.பிக்கு வயதாகிவிட்டது. கடந்த தேர்தலின்போது அதிகளவில் செலவழித்துவிட்டார். இந்தமுறையும் செந்தில் பாலாஜிதான் டி.டி.வி. கட்சியின் வேட்பாளர் என கரூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளும் கே.என்.நேருவும் தெரிவித்துள்ளனர். அப்போதுதான் செந்தில் பாலாஜியை தி.மு.க சார்பில் வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஸ்டாலினிடம் கே.என்.நேரு கூறியுள்ளார். அது உங்களால் முடியுமா என்று ஸ்டாலின் கேட்கபோது சிரித்துள்ளார் கே.என்.நேரு. 

 அதன்பிறகுதான் செந்தில் பாலாஜிக்கு தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மூலம் தூது அனுப்பப்பட்டது. செந்தில் பாலாஜியை தி.மு.க. இழுக்க முயற்சி செய்யும் தகவல் டி.டி.வி.தினகரனுக்கு தெரிந்ததும் அதைத் தடுக்க சசிகலா குடும்ப விசுவாசிகள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், சில காரணங்களுக்காக  டி.டி.வி.தினகரனையும் அவருக்காக தூதுவந்தவர்களையும் செந்தில் பாலாஜி நிராகரித்துள்ளார். 

 செந்தில் பாலாஜி

இதையடுத்து, செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு வர க்ரீன் சிக்னல் கொடுத்ததும் அந்தத் தகவல் ஸ்டாலினுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கட்சியில் இணைவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நீங்கள்தான் என்ற வாக்குறுதியை கட்சித் தலைமை முதலில் செந்தில் பாலாஜிக்கு கொடுத்துள்ளது. அடுத்து, அமைச்சர், மாவட்டச் செயலாளர் பதவி என மூன்று வாக்குறுதிகளை முதலில் தி.மு.க. தரப்பில் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே செந்தில் பாலாஜி. தி.மு.க-வில் இருந்தவர். அதன்பிறகுதான் அ.தி.மு.க.வுக்குச் சென்று போயஸ்கார்டனுக்குள் நுழைந்தார். சின்ன வயதிலேயே அவருக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்து அழகுபார்த்தவர் ஜெயலலிதா. குறிப்பாக சசிகலா குடும்பத்தினருடன் அதிக நெருக்கத்திலிருந்த செந்தில் பாலாஜி, மீண்டும் தி.மு.க.வுக்குச் சென்றது சசிகலா குடும்பத்தினரில் சிலருக்கு கடும் வருத்தம். செந்தில் பாலாஜி தொடர்பாக  டி.டி.வி. தினகரனிடம் சசிகலா பேசியுள்ளார். அதற்கு சில காரணங்களை க் குறிப்பிட்டு விளக்கமளித்துள்ளார் தினகரன்.  

 செந்தில் பாலாஜி

அறிவாலயத்துக்கு அவர் செல்வதற்கு முன் செந்தில் பாலாஜியிடம் ஸ்டாலின் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அ.தி.மு.க.வில் இருந்ததைவிட நீங்கள் தி.மு.க.வில் சிறப்பாக இருப்பீர்கள். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் கோஷ்டி பூசல் இருந்தால் அதை கே.என்.நேரு பார்த்துக்கொள்வார் என்று கூறியுள்ளார். இதனால், செந்தில் பாலாஜி, சந்தோஷமடைந்துள்ளார். செந்தில் பாலாஜியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் டி.டி.வி.தினகரனும், அ.தி.மு.க.வினரும் உன்னிப்பாக கவனித்துவருகின்றனர். 
ஏற்கெனவே செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அவர்மீது வேலை வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளின் ஃபைல்களை மீண்டும் தூசி தட்டலாமா என்று அ.தி.மு.க-வினர் ஆலோசித்துள்ளனர்.

கரூர் மாவட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உட்பட மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், செந்தில் பாலாஜியின் வருகையை ரசிக்கவில்லையாம். மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு என்பதால் செந்தில் பாலாஜியோடு இணைந்து செல்ல அவர்கள் முடிவெடுத்துள்ளனர். கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வில் அசைக்க முடியாத சக்தியாக செந்தில் பாலாஜி வலம் வருவார் என்று அவரின் ஆதரவாளர்கள் நம்புகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்குமண்டலத்தில் உள்ள தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெற முடியாத சூழல் நிலவியது. அதனால்தான் செந்தில் பாலாஜியை தி.மு.க.வில் இணைத்துள்ளார் ஸ்டாலின்.