புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் ஏட்டு நடத்திய லத்திசார்ஜ்!  | Police officer enters Pudhupettai police housing board

வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (14/12/2018)

கடைசி தொடர்பு:16:02 (14/12/2018)

புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் ஏட்டு நடத்திய லத்திசார்ஜ்! 

போலீஸ் ஏட்டு தாக்கியதில் காயமடைந்த மாணவன்

சென்னை புதுப்பேட்டையில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடியிருக்கும் ஏட்டு முருகேசன், இரண்டு கல்லூரி மாணவர்களை லத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புதுப்பேட்டையில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் ஏட்டு முருகேசன் என்பவர், 17 வயதாகும் இரண்டு கல்லூரி மாணவர்களை லத்தியால் அடித்ததாகப் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக எழும்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். காயமடைந்த இரண்டு கல்லூரி மாணவர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எதற்காக கல்லூரி மாணவர்களை ஏட்டு முருகேசன் தாக்கினார் என்று எழும்பூர் போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

காயமடைந்த மாணவனின் அப்பா ரகுராமன் கொடுத்த புகாரில், 13.12.2018 அன்று இரவு 8.30 மணியளவில் என் மகனும் அவனுடைய நண்பனும் வீட்டுக்கு அருகில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஆயுதப்படை பிரிவில் ஏட்டுவாகப் பணியாற்றும் முருகேசன் என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் என்னுடைய மகனை தகாத வார்த்தைகளால் பேசியதோடு லத்தியால் அடித்துள்ளார். அதில் என் மகனுக்கு முதுகு, கையில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. என் மகனின் நண்பனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரையும் தாக்கிய போலீஸ் ஏட்டு முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரின்பேரில் எழும்பூர் போலீஸார் ஏட்டு முருகேசன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 காயமடைந்த மாணவன்

முருகேசன் மீது அந்தக் குடியிருப்பில் உள்ளவர்களில் பலர் சரமாரியாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். சேலத்தைச் சேர்ந்த அவர், சென்னை ஆயுதப்படையில் டிரைவராக உள்ளார். அவரின் மனைவி மீதும் சில குற்றச்சாட்டுக்களைக் குடியிருப்பில் உள்ளவர்கள் கூறுகின்றனர். முருகேசன் மீது புகார் கொடுத்துள்ள ரகுராம், உளவுப்பிரிவில் ஏட்டுவாக நீண்டகாலமாகப் பணியாற்றியவர்.  உடல்நலக்குறைவு காரணமாக அவர், கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றுகிறார். அவரின் மகன், சென்னையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார். 17 வயதாகும் அவரையும் அவரின் நண்பருமான இன்னொரு கல்லூரி மாணவனையும்தான் லத்தியால் முருகேசன் தாக்கியதாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரகுராமனின் மனைவியையும் மகனையும் ஏட்டு முருகேசன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பில் பொறுப்பாளரான ஏட்டு ஜான்சனிடமும் முருகேசன் மீது பலர் குற்றம் சாட்டியுள்ளனர். முருகேசன் மீதான புகார் மனு, உயரதிகாரிகளுக்கு அனுப்பிய பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முருகேசன் வீட்டுக்கு அருகில் குடியிருந்த போலீஸ் தம்பதியிடமும் அவர், தகராறு செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் அந்தத் தம்பதியினரும் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். அதன் பிறகு அவர்கள் குடியிருப்பை காலிசெய்துவிட்டு வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர். ரகுராமன் மகனின் நண்பனின் அப்பாவும் போலீஸ் ஏட்டுவாக உள்ளார். அவரும் முருகேசன் மீது புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார். தற்போது, லத்தியால், இரண்டு கல்லூரி மாணவர்களைத் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. எனவே, போலீஸ் குடியிருப்பில்கூட ஒரு சிலரின் நடவடிக்கைகளால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று குமுறுகின்றனர் புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடியிருக்கும் போலீஸார்.

போலீஸூக்கு எதிராக போலீஸே செயல்படுவதால் யாரிடம் போய் முறையீடு என்று தெரியாத நிலை புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் நிலவுகிறது. சென்னை புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பு மட்டுமல்ல, சென்னையில் உள்ள பல போலீஸ் குடியிருப்புகளில் இதுபோன்ற பிரச்னைகளோடு, அடிப்படை வசதிகள் இல்லாத சூழலும் நிலவுகிறது.  

 முருகேசனிடம் பேச முயற்சி செய்தோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிட தயாராக உள்ளோம்.