குடியுரிமையை ரத்து செய்யக்கோரி திருநங்கைகள் மனு... ஆதங்கமும்... விளக்கமும்! | Transgenders gave a petition to the governor!

வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (14/12/2018)

கடைசி தொடர்பு:16:31 (14/12/2018)

குடியுரிமையை ரத்து செய்யக்கோரி திருநங்கைகள் மனு... ஆதங்கமும்... விளக்கமும்!

"இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரைக்கும் அரசாங்கம் ஒரு தெளிவான வரையறையை கொண்டுவரணும். ஒவ்வொரு திருநங்கைக்கும் அவங்க அவங்களுடைய சாதி அடிப்படையில் வழங்கக்கூடிய இடஒதுக்கீட்டில் திருநங்கைகளுக்காக ஒரு குறிப்பிட்ட இடஒதுக்கீட்டை கொடுக்குறதுதான் நாங்க எதிர்பார்க்குறது."

குடியுரிமையை ரத்து செய்யக்கோரி திருநங்கைகள் மனு... ஆதங்கமும்... விளக்கமும்!

திருநங்கைகளுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட அவர்கள் பெறுவதற்குப் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கின்றது. அரசு வேலை பெற தகுதி இருந்தும் நிராகரிக்கப்படும் திருநங்கைகளிடம் பேசி நம்முடைய விகடனில் கடந்த வாரத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். இந்நிலையில், அனுஶ்ரீ, ஆராதனா, காவியா இம்மூன்று திருநங்கைகள் குடியரசுத் தலைவருக்கு ஒரு மனு எழுதியுள்ளனர். அந்த மனுவில், `நாங்கள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள். எங்களுடைய குடியுரிமையை ரத்து செய்துவிடுங்கள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக சமூக ஆர்வலரும், டிரான்ஸ் ரைட்ஸ் நவ் கலெக்டிவ் (Trans Rights Now Collective) இயக்குநருமான கிரேஸ் பானுவிடம் பேசினோம். 

மனு குறித்து திருநங்கை கிரேஸ் பானுதிருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடக் கூடாது, பிச்சை எடுக்கக் கூடாதுன்னு ஒரு பக்கம் சொல்றாங்க. `நான் படிச்சிருக்கேன்.. என் படிப்புக்கு ஏற்ற மாதிரியான வேலையை எனக்குக் கொடுங்க'ன்னு சமூகத்துக்கிட்ட சொல்றோம். படிச்சு முடிச்சிட்டு அரசு வேலைக்குப் போகுறதுக்காக முயற்சி பண்ணி எக்ஸாம் எழுத அப்ளை பண்றோம். அந்த எக்ஸாம் அப்ளிகேஷனில் திருநங்கைகளுக்குன்னு ஒரு காலமே இல்லைன்னு சொல்லி கோர்ட்டுல கேஸ் போடுறோம். அதுக்கு அப்புறம் நம்மை தேர்வு எழுத அனுமதிக்கிறாங்க. தேர்வு எழுதி அதுல பாஸ் மார்க்கும் வாங்குறோம். ஆனா, எந்த நேர்முகத் தேர்வுக்கும் நமக்கு லெட்டர் அனுப்ப மாட்டேங்குறாங்க. திருநங்கைங்குற காரணத்தால் வேலைக்கு எடுத்துக்க முடியாதுன்னு சொல்றாங்க. மறுபடி கேஸ் போடுறோம். அந்த கேஸ் இரண்டு, மூன்று வருஷத்துக்கும் மேல இழுத்துட்டே இருக்கு. அதுவரைக்கும் அந்தத் திருநங்கைகள் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வாங்க?! தமிழ்நாட்டுல திருநங்கைகளுக்கு எம்.பி.ஸி கோட்டாவைப் பயன்படுத்தச் சொல்லி உத்தரவு போட்டுருக்காங்க. இதுல என்ன சிக்கல்னா, எல்லாத் திருநங்கைகளையும் எம்.பி.ஸி கோட்டாவில் அடக்கும்போது ஏற்கெனவே எம்.பி.ஸி கோட்டாவை ஆல்ரெடி பயன்படுத்திட்டு இருக்கிறவங்களுக்கு அப்புறமாகத்தான் எங்களைக் கணக்கில் எடுப்பாங்க. நான் ஒரு தலித் திருநங்கையா இருக்கட்டும், நான் ஒரு முஸ்லிம் திருநங்கையாக இருக்கட்டும்... அப்படியிருக்கும்பட்சத்தில் நான் எப்படி ஒரு எம்.பி.ஸி கோட்டாவைப் பயன்படுத்த முடியும்?  

இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரைக்கும் அரசாங்கம் ஒரு தெளிவான வரையறையை கொண்டுவரணும். ஒவ்வொரு திருநங்கைக்கும் அவங்க அவங்களுடைய சாதி அடிப்படையில் வழங்கக்கூடிய இடஒதுக்கீட்டில் திருநங்கைகளுக்காக ஒரு குறிப்பிட்ட இடஒதுக்கீட்டை கொடுக்குறதுதான் நாங்க எதிர்பார்க்குறது. இந்த ஒதுக்கீட்டைத்தான் மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன்படுத்துறாங்க. இப்படியான சூழலில் இந்தப் பிள்ளைங்க ஏன் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதுனாங்கன்னா, ஒவ்வொருத்தரும் இரண்டு வருஷத்துக்கும் மேல போராடிட்டு இருக்காங்க. அவங்களுடைய வழக்குக்குத் தீர்ப்பு கிடைக்கிறது ரொம்ப முக்கியம். ஆனா, அவங்களுடைய வழக்கை முதல்ல எடுத்து விசாரிச்சுக் கொடுக்கணும்னு கேட்கிறோம். அரசாங்கம் கள்ள மெளனம் சாதிச்சிட்டு இருக்காங்க. திருநங்கைகள் வாங்குற ஒவ்வொரு பொருளுக்கும் வரி கொடுக்கத்தானே செய்றாங்க. அவங்களும் இந்த நாட்டோட குடிமக்கள் தானே! திறமை இருந்தும் வேலை கிடைக்காதப்போ குடிமக்களா இருக்க நாங்க தகுதியில்லாதவங்கன்னு சொல்லித்தான் அவங்க இந்த முடிவை எடுத்துருக்காங்க" என்கிறார் ஆதங்கத்தோடு.

இது தொடர்பாக, முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்தியஶ்ரீ சர்மிளாவிடம் பேசினோம்.

"`திருநங்கை' என்கிற காரணத்தால் நிறைய திருநங்கைகளுக்கு அவங்களுக்கு நியாயமா கிடைக்கக்கூடிய வேலையைக் கூடக் கொடுக்கிறதுக்கு யோசிக்கிறாங்க. குடியரசுத் தலைவருக்கு நம்மளுடைய தரப்பிலிருந்து கடிதம் அனுப்புறோம். ஆனா, எந்த அளவுக்கு அதுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு கேட்டா கேள்விக்குறிதான்! 2014 நாட்சா (NATSA JUDGEMENT) தீர்ப்பின்படி, கல்வி வேலைவாய்ப்பிலிருந்து, தொழில் வளர்ச்சியிலிருந்து எல்லாவற்றுக்கும் தெளிவான வரையறையைக் கொடுத்திருக்காங்க. அந்தத் தீர்ப்பை விரிவுபடுத்தினாலே இந்திய அளவில் திருநங்கைகளுக்கு ஒரே மாதிரியான சட்டத்தை உருவாக்க முடியும். 2014- ஏப்ரல் 15-ல் கொடுத்த அந்தத் தீர்ப்பே இன்னும் விரிவுபடுத்தலை. அந்தத் தீர்ப்பை ஃபாலோ பண்ணவும் இல்லை. 

திருநங்கை சத்தியஶ்ரீசட்டப்படி, குடியுரிமையை ரத்துப் பண்ணுங்கன்னு மனு கொடுக்கும்போது அதை அரசாங்கம் முதலில் கவனத்தில் எடுத்து அவங்களுடைய கோரிக்கை என்னன்னு கேட்கணும். ஆனா, இவங்க எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணுவாங்கன்னு நமக்குத் தெரியலை. தமிழ்நாட்டுல ஒரு மாதிரி, கேரளாவுல ஒரு மாதிரி அப்படின்னு திருநங்கைகளுக்கு ஒவ்வொரு விதமான சட்டங்கள் இருக்கின்றன. இந்தியா முழுவதும் திருநங்கைகளுக்குன்னு ஒரே மாதிரியான சட்டங்கள் இயற்றியே ஆகணும். ஆண், பெண் பாலினத்தவர்களுக்கு எப்படி ஒரே சட்டங்கள் இருக்குதோ அதே மாதிரி திருநங்கைகளுக்கும் இருக்கணும். சுதந்திர இந்தியாவில் சுதந்திரமே இல்லாம வாழுறோம். ஓட்டு உரிமை மட்டும் வைச்சிக்கிட்டு நாங்க என்ன பண்றது!" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்