வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (14/12/2018)

கடைசி தொடர்பு:16:32 (14/12/2018)

`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்!’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்

செந்தில் பாலாஜி  தி.மு.க-வில் இணைந்தது தொடர்பாக அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

தினகரன்

சென்னை அறிவாலயத்தில் இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன் ஆதரவாளர்களுடன் செந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைந்தார். அதன் பின்னர் அவர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்திதார். அந்தச் சந்திப்பில் அவர் கடந்த ஒருமாதமாக தி.மு.க-வின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் அதனால் இணைந்ததாகவும் தெரிவித்தார். அந்தப் பேட்டியில் அவர் தினகரன் குறித்து எதுவும் பேசவில்லை. செய்தியாளர்களிடம் தினகரன் குறித்த கேள்விகளைத் தவிர்த்துவிட்டார். 

செந்தில் பாலாஜி

இந்நிலையில் சென்னை அடையாற்றில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். அப்போது அவர், ``தம்பி செந்தில் பாலாஜியை எனக்கு 2006-லிருந்து தெரியும். அப்போது சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வேட்பாளர் தேர்வு குறித்துக் கேட்டார். அப்போது நான் தேர்வு செய்து கொடுத்த பெயரில் செந்தில் பாலாஜி பெயரும் ஒன்று. அதன் பின்னர், அவரை ஜெயலலிதா வேட்பாளராகத் தேர்வு செய்தார். வெற்றி பெற்றார். 

2007-க்குப் பிறகு, தீவிர அரசியலிலிருந்து என்னை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். இப்படிச் சொன்னால் அமைச்சர் ஜெயக்குமார் போன்றோருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதனால்தான் அப்படிச் சொன்னேன். வேற ஒண்ணும் இல்ல. அதன் பின்னர், நான் செந்தில் பாலாஜியைப் பார்க்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், நடந்தது எல்லாம் உங்களுக்குத் தெரியும்.

இணைப்பு

செந்தில் பாலாஜி எங்களுடன் நல்லாதான் இருந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் என்னிடம் வந்து, எனக்கு சொந்த பிரச்னை கொஞ்சம் இருக்கிறது. அதெல்லாம் முடிச்சிட்டு வர்றேன். அதுவரை கொஞ்சம் கட்சிப் பணியிலிருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்றார். நானும் விட்டுவிட்டேன். கஜா புயல் நேரத்தில்கூட மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருள்களை அனுப்பி வைத்திருந்தார். 

டிசம்பர் 5, ஜெயலலிதா நினைவு தினத்தின்போதுகூட அவர் வரவில்லை. அப்போதுதான் இது தொடர்பாகக் கேட்டேன். அவர் ஏதோ வழக்கு தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசிக்கொண்டிருப்பதாகவும், அதில் தாமதமானதால் வர முடியாததாகச் சொன்னார்கள். அதன் பின்னர் அவரிடம் பேசவில்லை. 

பின்னர் மூன்று தினங்களுக்கு முன் அவர் தி.மு.க-வுக்குச் செல்ல இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அப்போதும் பேச சொன்னேன். அப்போது பேசியவர்கள், அவர் பேசுவது சரியில்லை என்றார்கள். நானும் விட்டுவிட்டேன். யாரையும் பிடித்து வைக்க முடியாது. ஏதோ சொந்த பிரச்னை என்றார். இப்போ ஒருமாசமா கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதாகச் சொல்கிறார். ஒண்ணும் பிரச்னை இல்லை. எங்கிருந்தாலும் வாழ்க. எங்ககூட இருக்கிற வரை நன்றாகத்தான் இருந்தார். 

திமுகவில்

அவர் போனதுல எந்த வருத்தமும் இல்லை. பிடிக்கலனா, போகலாம். அவர் காரணம் சொன்னால், அதற்குப் பதில் சொல்லுவோம். ஆனால், எந்தக் காரணமும் சொல்லவில்லை. எனக்கு என்ன வருத்தன்னா, கரூர் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை ஒன்றரை லட்சம் படிவங்கள் அவரிடம் இருக்கிறது. தொண்டர்கள், நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று செய்த உழைப்பு அது. அது இன்னும் கைக்கு வரவில்லை. அது மட்டும்தான் எனக்கு வருத்தம். அதைக் கொடுத்து அனுப்பிட்டாருன்னா எனக்கு மகிழ்ச்சி. அது நிர்வாகிகளின் உழைப்பு. 

யாரோ ஒரு சிலர் போவதால், மக்கள் இயக்கம் அழிந்துவிடும் என்று கூறுவது தவறு. அவர் நல்ல தம்பிதான். எங்களுடன் சிறப்பாகப் பணியாற்றினார். அதை எல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது. செந்தில் பாலாஜியை விடுங்கள். தி.மு.க எங்கள் இயக்கத்திலிருந்து ஒரு நிர்வாகியை இழுத்து, அந்த இணைப்பை விழா போல் கொண்டாடும் நிலையில்தான் அந்தக்கட்சி உள்ளது. தி.மு.க-வின் பலத்துக்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. காரணம், ஆர்.கே.நகரில் டெபாசிட் காலி ஆனதில் இருந்து தி.மு.க இது போன்ற முயற்சிகளைச் செய்து வருகிறது” என்றார்.

செந்தில் பாலாஜியை முன்னே அனுப்பிவிட்டு நீங்களும் தி.மு.க-வில் இணையவுள்ளதாக அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்களே என்று செய்தியாளர் கேட்டதுக்கு,  ``சர்க்கஸ் கோமாளி மாதிரி பேசுபவர்களுக்கு நான் என்ன பதில் சொல்ல. பதில் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஜெயலலிதாவுக்குக் களங்கம் ஏற்படுத்தியவர்களுடன் நான் இணைவேனா. தி.மு.க-வில் இணைய வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. தி.மு.க எதிர்ப்பு என் ரத்தத்தில் உள்ளது. 

டிடிவி

செந்தில் பாலாஜி தி.மு.க-வுக்குச் சென்றதுக்குப் பதிலாக பழனிசாமி இருக்கும் அ.தி.மு.க-வுக்குச் சென்றிருக்கலாம். கையில் அம்மா படத்தை பச்சை குத்தியிருக்கிறார். இன்றைக்கு அங்க போயிருக்கிறார்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட பத்திரிகையாளர்கள், ``முன்னர் நீங்கள் எதிரியைக்கூட மன்னிப்பேன், துரோகியை மன்னிக்க மாட்டேன் என்று சொன்னீர்கள். இன்று செந்தில் பாலாஜி, பழனிசாமி கட்சிக்குச் சென்றிருக்கலாம் என்று சொல்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ``அ.தி.மு.க அம்மா கட்சி. தி.மு.க-வில் போய் அவர், அம்மா படத்தை வைக்க முடியுமா. துரோகியுடன்கூட போகலாம். விரோதியுடன் போயிட்டாரே. என்றைக்கு இருந்தாலும், அ.தி.மு.க எங்களுடன் இணையப் போகிற இயக்கம். அந்த அர்த்தத்தில்தான் சொன்னேன்” என்றார்.